கனடாவில் தமிழகத்தைச் சேர்ந்த விமான ஓட்டுநர் உரிமம் பெறும் பயிற்சில் 2மாணவர்கள் பரிதாப பலி!

 

கனடாவில் வணிகரீதியான விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காகப் பயின்று வந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு இளம் இந்திய மாணவர்கள், விமானப் பயிற்சியின் போது நடந்த கோர விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இந்திய அளவிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. வணிகரீதியான விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான பறக்கும் நேரத்தை நிறைவு செய்வதற்காக ‘ஹார்வ்ஸ் ஏர்’ பயிற்சிப் மையத்தில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட ‘செஸ்னா 172’ ரகச் சிறிய விமானத்தில் இரவு நேரப் பயணத்தை மேற்கொண்டபோதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.

சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள கிஸ்பி பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாகக் கனடா செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு இலக்கை அடையாததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, கனடிய ராணுவத்தின் மீட்புக் குழுவினர் சிதைந்த விமானத்தின் இடிபாடுகளையும், அதில் உயிரிழந்த நிலையில் இருந்த இரு மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்தியத் தூதரகம், அவர்களின் உடல்களை தாயகமான இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் தூதரக உதவிகளையும் முழு வீச்சில் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் இந்த விபத்துக்கான பின்னணி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.