உக்ரைன் மீதான போரில் 4 வயது சிறுமி முதல் 82 வயது மூதாட்டி வரை 1,004 பாலியல் பலாத்கார குற்றங்கள் அரங்கேறி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா தனது முழு அளவிலான ஆக்கிரமிப்பு போரைத் தொடங்கியது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் இருதரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் 20 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 1,004 கொடூர பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 89 சதவீதம் ரஷ்ய படையினராலும், 11 சதவீதம் உக்ரைன் ராணுவத்தினராலும் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் 4 வயது சிறுமி முதல் 82 வயது நிரம்பிய மூதாட்டி வரை அடங்குவர். சிறைபிடிக்கப்பட்ட போர் கைதிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டுவதற்கும், சித்திரவதை செய்வதற்கும் ஒரு ஆயுதமாகவே பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கைதிகளின் பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுதல், ஆயுதங்களால் தாக்குதல், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தல் போன்ற கொடூரங்கள் அரங்கேறியுள்ளன.
இதுகுறித்து ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், ‘அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த அருவருப்பான செயல்கள் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உக்ரைன் போரில் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய பாலியல் பலாத்கார கொடுமைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.



