கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் கடந்த 9 மாதங்களாக போக்கு காட்டி வந்த ராட்சத முதலை இன்று காலை வலையில் சிக்கியது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே கோதையாற்றில் செங்குழிகரை என்ற இடத்தில் உள்ள உறைகிணற்றின் மேல் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலை ஒன்று தென்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் முதலை தென்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தண்ணீரில் மறைந்து கொண்ட முதலை அவ்வப்போது கோதையாற்றில் மக்கள் கண்ணில் படும் வகையில் உலாவி வந்தது.
அதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் முதலையை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. உறைகிணற்றில் மேல் கோழியை வைத்து பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதிக வெயிலில் கோழி இறந்துபோக முதலை சிக்கவில்லை. பின்னர் முதலை தென்பட்ட செங்குழிக்கரை பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சி நடந்தது. ஆனால் வனத்துறையினர் வைத்த கூண்டு காட்சி பொருளாக இருக்க அந்த பகுதியில் முதலை சர்வசாதாரணமாக பல நாட்கள் வந்து சென்றது. பின்னர் களியல் பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதலை உலாவியதை மக்கள் பார்த்து பீதியில் உறைந்தனர். முதலை சிக்காததால் வனத்துறையினருக்கு பெருத்த தலைவலியாக மாறியது. கடந்த 9 மாதங்களை கடந்தும் முதலை சிக்காமல் போக்கு காட்டி வந்தது.
இதையடுத்து முதலையை பிடிக்கும் நிபுணத்துவம் பெற்ற சென்னையை சேர்ந்த குழுவினர் கடந்த மாதம் 2ம் தேதி கோதையாற்று பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் முதலை வந்து சென்ற இடங்களில் முகாமிட்டு முதலையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் அவர்களது கண்ணிலும் முதலை புலப்படாமல் இருந்தது. இதற்கிடையே குமரியை சேர்ந்த வனப்பகுதியை படம் எடுக்கும் ஒருவரது கேமராவில் கோதையாற்றில் சுற்றி வரும் முதலை விழுந்தது.
முதலில் தென்பட்ட முதலையில் இருந்து சற்று கொழுத்த முதலையாக மாறியதால் பொதுமக்களின் அச்சம் அதிகரித்தது. ராட்சத முதலையை பிடிக்க வனத்துறையினர் மற்றும் குழுவினர் எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நிபுணத்துவ குழுவினர் சென்னைக்கு சென்றுவிட்டனர். எனினும் வனத்துறையினர், குழுவினர் திற்பரப்பு அருவி பகுதி, ஒரு நடைகல் பாலம் பகுதி, களியல் பாலம் உள்ளிட்ட இடங்களில் வலைகளை விரித்து வைத்திருந்தனர். இந்த பகுதிகளுக்கு முதலை வந்தால் வலையில் சிக்கும் என்ற நம்பிக்கையில் வனத்துறையினர் காத்திருந்தனர். இந்தநிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் செங்குழிகரை உறைகிணற்றில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒருநடைகல் பாலத்தின் அருகே விரித்திருந்த வலையில் ராட்சத முதலை சிக்கியிருந்ததை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனச்சரகர் லோகேஸ்வரன் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வலையில் முதலை சிக்கியதை உறுதிப்படுத்தினர். இதற்கிடையே வலையில் முதலை சிக்கிய தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் முதலையை பார்ப்பதற்காக ஒரு நடை கல் பாலத்தில் திரண்டனர். இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் முதலை மீது இருந்த வலையுடன் மேலும் 2 வலையை போட்டு முதலையை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து நெல்லையில் உள்ள மருத்துவ பரிசோதனைக்கு செய்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கிருந்து திற்பரப்புக்கு வந்தனர்.
முதலை மருத்துவ பரிசோதனைக்காக பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் வன அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் பிடிபட்ட முதலை சுமார் 300 கிலோவிற்கு மேல் எடை கொண்டது. அது ஆணா? பெண்ணா? என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவரும். பரிசோதனைக்கு பிறகு உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி முதலை எந்த பகுதியில் விடப்படும் என்பது முடிவு செய்யப்படும் என்றனர்.
* முதலை சிக்கியதால் மக்கள் நிம்மதி
கோதையாற்றில் முதலை தென்பட்ட நாளில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்தனர். அவ்வப்போது முதலை மீண்டும் வெளியில் வந்ததால் மக்கள் குளிக்க செல்வதற்கு கூட ஒருவித அச்சத்துடன் சென்று வந்தனர். பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்ததால் எப்படி முதலை சிக்கும் என்று மக்கள் காத்திருந்தனர். இந்தநிலையில் இன்று முதலை சிக்கியது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. மேலும் முதலை பிடிபடாததால் தவித்து வந்த வனத்துறையினரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.



