ஆசியாவின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடங்கிய வித்தல்ராவ் விகே பாட்டீலின் கொள்ளுப்பேத்தியும், ஒன்றிய முன்னாள் அமைச்சர் பாலாசாகேப் விகே பாட்டீலின் பேத்தியுமான நீலா விகே பாட்டீல் (41), மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் சகோதரர் மகள் ஆவார். சுவீடனில் பிறந்த இவர் தனது பள்ளிப்பருவத்தை மகாராஷ்டிராவின் அகமதுநகரில் கழித்தார். பின்னர் சுவீடன் திரும்பிய அவர் வர்த்தகம் மற்றும் சட்டப்படிப்பை முடித்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
தேர்தல் வெற்றி குறித்து பேசிய நீலா, ‘நான் 15 வயதாக இருந்தபோதே எனது தாத்தா என்னை பட்ஜெட் படிக்க வைத்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மக்கள் பணியாற்றுவேன்’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். சுவீடனில் 349 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இடதுசாரி கூட்டணி 176 இடங்களை கைப்பற்றி நூலிழையில் பெரும்பான்மை பெற்றது. இதில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததால் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் பதவி விலகிய நிலையில், முன்னாள் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.இந்திய செய்திகள்
இந்தத் தேர்தலில் ஸ்டாக்ஹோம் தொகுதியில் கிரீன் கட்சி சார்பில் போட்டியிட்ட நீலா அமோக வெற்றி பெற்றார். சுவீடன் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் அலுவலகத்தில் நிதி ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், ‘வாக்களிக்க உரிமை இல்லாத குழந்தைகளின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் எனது குரல் வலுவாக ஒலிக்கும்’ என்று கூறினார்.



