எச்-1 பி விசா கட்டணம் மேலும் ஒரு லட்சம் டாலர் அதிபர் டிரம்ப்

 

அமெரிக்காவில் எச்-1 பி விசாவுக்கு விதிக்கப்படும் ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெளிநாட்டைச் சேர்ந்த திறமைமிக்க பணியாளர்களை வேலையில் அமர்த்த விரும்பும் அமெரிக்க நிறுவனங்கள், அரசாங்கத்தின் எச்-1பி விசா திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம் தொழில்நுட்பம் மற்றும் பிற துறை சார்ந்த வெளிநாட்டு வல்லுநர்கள் சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்ற முடிகிறது.Time & Calendars

அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்-1 பி விசாக்களுக்கு கட்டணமாக 1,00,000 டாலர்(கிட்டத்தட்ட ரூ. 96 லட்சம்) விதித்து முதன்முதலாக கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இந்தியர்களுக்கு எச்-1பி விசா முக்கியமான வழியாக இருந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தியது.

எச்-1 பி விசா மீதான கட்டுப்பாடுகள் இந்த மாதத்துடன் (செப்டம்பர் 2026) முடிவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்கும் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எச்-1 பி பணியாளர்களின் புதிய விண்ணப்பங்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தும். தேசிய நலன் கருதி விலக்கு வழங்கும் அதிகாரமும் அரசிடம் உள்ளது.

மேலும், எச்-1பி விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் சமீபத்தில் அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது அத்தகைய நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எச்-1பி திட்டத்தைச் சில நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதால், அது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கிறது எனவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது.