செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிராந்திய நலன்களை முன்னெடுக்கும் நோக்கில் எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் எரித்திரியாவின் ஆளும் கட்சி மற்றும் இராணுவத்தைக் இலக்குவைத்து இந்தத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
எத்தியோப்பியாவின் திக்ரே (Tigray) பிராந்திய மோதலின் போது எரித்திரியப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.
நியாயமற்ற தடை
செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சையாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையிலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்ட சூழலிலும், செங்கடலின் உபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள எரித்திரியாவின் அமைவிடம் அமெரிக்காவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், எரித்திரியா மீது பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ‘தேசிய அவசரகால நிலை’ முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை எரித்திரிய அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன், தங்களது நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நியாயமற்ற தடைகளை நீக்கியமைக்காக ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்திற்குத் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.



