கட்டாய நாடுகடத்தப்பட்ட மும்தாஜ்க்கு ரூ.2லட்சம் இழப்பீடு, அசாம் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 

வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு அசாம் அரசு ரூ.2லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கவுஹாத்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாமின் நாகோன் பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ் பேகம். 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2019ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தினால் மும்தாஜ் பேகம் குடியுரிமை அல்லாதவர் என்று அறிவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக மும்தாஜ் கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆதாரங்களை முறையாக பரிசீலிக்காததால் தீர்ப்பாயத்தின் முடிவை கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மே 30ம் தேதி தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகவும் உத்தரவிட்டது. மே 30ம் தேதி தீர்ப்பாயம் முன் ஆஜரான மும்தாஜை வெளிநாட்டினர் என்று தீர்ப்பாயம் அறிவித்தது. அதே நாளில் அவர்கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ஜுன் 14ம் தேதி அவரது குடும்பத்தினருக்கு தெரியாமல் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில் மும்தாஜ் பேகத்தின் கணவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கல்யாண் ராய் சுரானா மற்றும் சுஸ்மிதா புகான் கவுன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 3ம் தேதி பிறப்பித்த உத்தரவில் மும்தாஜ் பேகத்தை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வெளியுறவு துறை அமைச்சகத்தை எதிர்வாதியாக சேர்த்தது. மும்தாஜின் கணவருக்கு அசாம் அரசு ரூ.2லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது