சென்னை வண்ணான்துறை பகுதியில் தவெக நிர்வாகி கண்ணன் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கண்ணன் அந்த பகுதியில் பந்தா காட்டி வந்ததால் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் நீண்டகால முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 2009 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய முன்விரோதமும் இந்த கொலைக்கு பின்னணியாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வண்ணான்துறை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் (45) கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐடி நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த கண்ணன், J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 5ஆம் தேதி இரவு வண்ணான்துறை ராமசாமி அவென்யூ, எல்லையம்மன் கோயில் தெருவில் கண்ணன் நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கண்ணனின் சித்தி மகன் புருஷோத்தமன் (33) அளித்த புகாரின் பேரில் J-5 சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அடையார் காவல் மாவட்ட துணை ஆணையாளர் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பரணி (20), ராகேஷ் (20), நரேஷ் (20), மணிகண்டன் (20), ஹரிஹரன் (20) ஆகிய 5 பேரையும் செப்டம்பர் 6ஆம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கண்ணனுக்கும் பரணியின் குடும்பத்தினருக்கும் இடையே நீண்டகால முன்விரோதம் இருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு அடையார் பகுதியில் பரணியின் பெரியப்பா சிவா என்பவர், கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், கடந்த 2016ஆம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் பரணியின் தந்தை வேலு கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முன்விரோதம் ஒரு புறம் இருந்த நிலையில், கண்ணன் அந்த பகுதியில் தனது செல்வாக்கை காட்டி வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையும் கொலைக்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கண்ணன் தவெக நிர்வாகியாக செயல்பட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது அரசியல் செயல்பாடுகள் அல்லது கட்சி சார்ந்த பிரச்சினைகள் இந்த கொலைக்கு காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்கான முழுமையான காரணம், திட்டமிடல் மற்றும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



