கடற்படை கப்பல் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து , 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவில் தொடர்ந்து குண்டுவீச்சு நடந்ததாக ஈரான் செய்தி நிறுவனமான பார்ஸ் நேற்று தெரிவித்தது.
கடந்த 31ம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், கார்க் தீவு அருகே நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பலை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடியாக கார்க் தீவு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானிய எண்ணெய் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. ஒரு கப்பல் ஜாஸ்க் என்ற இடத்திலும், மற்றொரு கப்பல் ஓமன் வளைகுடாவிலும் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த கப்பல்கள் ஈரான் புரட்சிகர காவல் படை மற்றும் அதன் பிராந்திய ஏஜெண்டுகளுக்கு நிதியளிக்கும் ஒரு வலையமைப்பின் பகுதியாக இருந்தன என்று தெரிவித்துள்ளது.



