கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தின் மதுரை பதிவு எண் கொண்ட காரில் 8 பேர் பயணித்துள்ளனர். அந்தக் கார் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது அதே திசையில் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு சாலை பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த லாரி மீது கார் மோதியுள்ளது. இந்த விபத்து பணம்பிக்குன்னு என்ற இடத்தில் நடந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். இருப்பினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உட்கூறு ஆய்வுக்காக திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரது கல்லூரி அடையாள அட்டை கிடைத்துள்ளது. அதில் அவர் திண்டுக்கல்லில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் என தெரியவந்துள்ளது. அதை வைத்து உயிரிழந்தவர்கள், மாணவர்களாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
விபத்தில் சிக்கிய கார் முற்றிலுமாக உருக்குலைந்த நிலையில் தீயணைப்பு படையினர், காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் என அனைவரும் இணைந்து கடுமையாக போராடி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



