உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 12 பேரில் ஒருவர் இந்தியர் என்று அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. சமீப நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகின்றது. இந்த தாக்குதல்களில் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் சேதடைந்தன.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,‘‘நேற்று முன்தினம் மாலை முதல் ஒடெசா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வான்வழி குண்டுகள் மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன.ரஷ்யாவின் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் இந்தியர். தங்கள் குடும்பத்தினரையும் அன்புக்குரியவர்களையும் இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.



