லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த ஈரான் மீது போர்க்குற்ற விசாரணை டிரம்ப் !

 

அமெரிக்க ராணுவப் படைகள் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் இலக்குகள் மீது நடத்தியத் தீவிரத் தாக்குதல்களுக்குப் பிறகு, “ஈரான் அதிகாரப்பூர்வமாக ஒரு தோல்வியடைந்த நாடு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கி லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த அந்நாட்டு தலைவர்கள் மீது ‘மனிதகுலத்திற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படைகள் அழிக்கப்பட்டு விட்டன; அந்நாட்டின் நாணயம் மதிப்பையிழந்து 300% பணவீக்கம் நிலவுகிறது; ராணுவத்திற்கும் போலீசாருக்கும் சம்பளம் கொடுக்கக்கூடப் பணமில்லை. அந்நாட்டுத் தலைமை முற்றிலும் சீர்குலைந்து போய்விட்டது” என விமர்சித்துள்ளார்.

போரட்டக்காரர்களுக்கு எதிராக ஈரானிய அரசு மேற்கொண்டு வரும் வன்முறைகளைக் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான போர்க் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை கடல் வழியில் வர்த்தகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாகக் கடல் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற ஈரானிய கடற்படை தளங்களை இலக்கு வைத்து அமெரிக்கா வீரியமிக்கத் தாக்குதல்களை நடத்தியது. இதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றிய ஈரான், ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவிப் பதிலடித் தாக்குதல் நடத்தியது. இருப்பினும் பெரும்பாலான ஏவுகணைகளை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளன.

அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல்கள் மற்றும் டிரம்பின் காரசாரமான பேச்சுக்கு மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஜோர்டான் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டிப்பாக அமெரிக்கா தகுந்த பதில் கொடுக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளதால், அமெரிக்கா-ஈரான் இடையே எந்நேரமும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.