முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
ரணிலின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செலவினங்களின் கீழ் இரண்டு சம்பளங்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், கடந்த ஜூன் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சுஜீஸ்வர பண்டார மேற்கண்ட பதவிகளை வகித்த காலத்தில் அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன மற்றும் ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.
பண மோசடி
சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 1.93 மில்லியன் ரூபாவும், திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் 4.26 மில்லியன் ரூபாவும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பணி ஜனாதிபதி செயலக செயலாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவினால் பிணை நிராகரிக்கப்பட்டது.
அத்துடன் அவரை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.



