கடனை திருப்பிக் கொடுக்காத கடை உரிமையாளர் – அரங்கேறிய கொடூரம்

 

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கத்தேரி ஊராட்சி கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், கடந்த 11-ம் தேதி பச்சை நிற வலையால் உடல் முழுவதும் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக சங்ககிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சங்ககிரி போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்ததால் கொலை வழக்காக மாற்றி, குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது

சங்ககிரி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் சங்ககிரி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் சக்திவேல், உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

கல்குவாரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யப்பட்டதுடன், அப்பகுதியில் பதிவான சுமார் 3 லட்சம் செல்போன் எண்களும் ஆய்வு செய்யப்பட்டது. இறந்தவரின் கையில் ‘RENU’ என பச்சை குத்தியிருந்த அடையாளத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றது.

இதில், சடலமாக கிடந்தவர் ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 41) என்பதும், குமாரபாளையத்தில் உள்ள நாட்டு கோழி வறுவல் கடையில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர் (வயது 41) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் தேடுவதை அறிந்த சௌந்தர், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல கேரளா விமான நிலையம் நோக்கி சென்ற போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஆனந்த் தன்னிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி திருப்பித் தராமலும், கடையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் இதன் காரணமாக ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் சௌந்தர் ஆட்டோ டிரைவர்களான முஸ்தபா என்ற அலாவுதீன் (30), அருள் (30), குல்பிர் பாஷா (45) ஆகியோருக்கு மதுவாங்கி கொடுத்து மது போதையில் இருந்த ஆனந்தை கடையில் வைத்து தாக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் ஆனந்தின் உடலை ஆட்டோவில் ஏற்றி கத்தேரி கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு கொண்டு சென்று வீசியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கடை உரிமையாளர் சௌந்தர் நேற்று கைது செய்யப்பட்டார்.

மேலும் தலைமறைவாக இருந்த புள்ளாகவுண்டம்பட்டி வினோபாஜி நகர் பகுதியில் சேர்ந்த முஸ்தபா என்ற அலாவுதீன் (32), குமாரபாளையம் குலத்துகாடு பகுதியை சேர்ந்த குல்பிர் பாஷா(46), குப்பாண்டபாளையம் புல்லுகாடு பகுதியை சேர்ந்த அருள்(30), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (49) ஆகிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தனது கடையில் வேலை பார்த்த கூலி தொழிலாளியை முதலாளி கூலிப்படைக்கு மதுவாங்கி கொடுத்து கொலை செய்துவிட்டு வெளிநாடு தப்பி ஓட முயன்ற கடை உரிமையாளர் உட்பட 5 பேரை 11 நாட்களில் கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.