வைர நகைகள் ரூ.3 கோடிகொள்ளை.. சிக்கிய கவுன்சிலர் மகன் –

 

மதுரையிலிருந்து சென்னை நோக்கி வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நகைக்கடை ஊழியரிடமிருந்து ₹3 கோடி மதிப்புள்ள வைர நகைகளைக் கொள்ளையடித்த பாட்னா மாநகராட்சி கவுன்சிலரின் மகன் உட்பட இருவரை திருச்சி ரயில்வே காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சிறுநீர் கழிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி
சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் தீபக் சஞ்செட்டி. 32 வயதாகும் இவர் தி.நகரில் உள்ள ‘மணி ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூலை 23-ஆம் தேதி இரவு, மதுரையிலிருந்து சென்னை நோக்கிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் A43 இருக்கை பயணித்துள்ளார். அப்போது தனது தோள்பையில் ₹3 கோடி மதிப்புள்ள வைர நகைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது

இதனைத் தொடர்ந்து ரயில் திருச்சி ரயில் நிலையத்தை அடைந்தபோது, தீபக் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது,தன்னுடைய இருக்கையில் வைத்திருந்த நகைகள் இருந்த பையைக் காணாமல் போனதைக் கண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தர் தீபக் சஞ்செட்டி நடந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

ஸ்மார்ட் வாட்ச் கொடுத்த க்ளூ
விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட பைக்குள் தீபக் சஞ்செட்டி ஒரு‘ஸ்மார்ட் வாட்ச்’வைத்திருந்தது தெரியவந்தது.அதன்பிறகு, ஜிபிஎஸ் (GPS) இருப்பிடத்தைக் கண்காணித்தபோது, லால்குடி அருகே உள்ள கள்ளக்குடி ரயில் நிலையத்தில் லோக்கேஷன் காட்டியது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் கிழிந்த நிலையிலிருந்த தோள்பையும்,அந்த ஸ்மார்ட் வாட்சும் கண்டுபிடித்து மீட்டெடுத்தனர்.

தொடர்ந்து, மதுரை ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளையும், அதே பெட்டியில் பயணித்தவர்களின் பட்டியலையும் ஆய்வு செய்ததில் இருவர் மீது சந்தேகம் வலுத்தது. அவர்களின் புகைப்படங்களைப் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பித் தேடி வந்த காவல்துறையினர், பீகார் மாநிலப் போலிசாரின் உதவியோடு பாட்னா மாநகராட்சி கவுன்சிலரின் மகனான ராஜன் குமார் மற்றும் அவனது கூட்டாளி அமர்நாத் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
அண்ணண் சீர்! 812 கோடி பட்டு புடவை யாருக்கு? அமைச்சர் ஜெகதீஸ்வரி சொன்ன தகவல்

திட்டமிட்டு நடந்த கொள்ளை சம்பவம்
மதுரை ரயில் நிலையத்திலேயே தீபக் சஞ்செட்டியை நோட்டமிட்ட இவர்கள், திருச்சிஅருகே ரயில் சென்றபோது அவர் இருக்கையில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திப் பையைக் திருடியுள்ளனர். அமர்நாத் திருடிய பையை ராஜன் குமாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் சென்னை சௌகார்பேட்டைக்கு வந்து நகைகளின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்துவிட்டு, மும்பை தப்பிச் செல்லத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூக ஆர்வலர்களின் கேள்வி – காவல்துறை நடவடிக்கை என்ன?
இந்த சம்பவம் குறித்துச் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ரயில்களில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது கவலையளிக்கிறது. அதேநேரம் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நகைகளைக் கொண்டு செல்லும்போது ஒரு நபரை மட்டும் நம்பி அனுப்புவது பாதுகாப்பற்றது. எவ்வளவு கவனமாக இருந்தாலும் இயற்கை உபாதைகள் மற்றும் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, நகைக்கடை உரிமையாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் ஆட்களை அனுப்ப வேண்டும் எனச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.