–
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஆறு மாதங்களாகத் தொடரும் போர்ப் பதற்றத்தின் மத்தியில், மத்திய கிழக்கு நாடான ஓமன் (ஓமன்) தங்களுக்கு இடையூறாக இருந்தால் அந்நாட்டின் மீது கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் ஊடகவியலாளருக்கு அளித்த தொலைபேசிப் பேட்டியில், ஓமன் நாட்டின் தூதரக நிலைப்பாட்டிற்கு எதிராகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி டிரம்ப் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.உலகச் செய்திகள்
உலகின் மிக முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானும் ஓமனும் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்ய முயன்று வருகின்றன. அமெரிக்கா தன் சார்பில் தீவிரத் தடையை விதித்துள்ள நிலையில், ஓமன் நாடு ஈரானுடன் இணைந்து தனிவழிப் பாதையை உருவாக்க முயல்வது அமெரிக்காவின் கோபத்தைத் தூண்டியுள்ளது. “ஓமன் எங்கள் வழியில் குறுக்கிட்டால் அவர்கள் மீது பாரிய அளவிலான குண்டுகளை வீசுவோம்” என டிரம்ப் நேரடியாகவே எச்சரித்துள்ளார்.
அத்துடன், ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு “வெள்ளைக்கொடி ஏந்திச் சரணடைய வேண்டும்” என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரான் சிறந்த இராஜதந்திர நகர்வுகளைச் செய்தாலும், தற்போது பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பலவீனமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவரத் தமக்கு எவ்விதக் காலக்கெடுவும் இல்லை என்றும், அமெரிக்காவிடம் போதிய ராணுவ ஆயுதக் கிடங்கு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வழக்கமாகத் தூதரக வழிநடத்துதலைச் செய்துவரும் நடுநிலை நாடான ஓமன் மீதே டிரம்ப் நேரடியாகப் பாயந்துள்ளது, வளைகுடாப் பிராந்தியத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுப் பகுதியாக விரைவில் அறிவிக்கப் போவதாகக் கூறிவரும் டிரம்பின் இந்த அதிரடிப் பேச்சு, உலகளாவிய எண்ணெய் சந்தையிலும் பன்னாட்டு அரசியல் வட்டாரத்திலும் மீண்டும் போர் மேகங்களை அடர்த்தியாக்கியுள்ளது.



