எப்ஸ்டீன் 2015 வழக்கு ஆவணங்களை திறக்க நீதிமன்றம் உத்தரவு

..

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும், சிறுமிகள் பாலியல் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உயிரிழந்தவருமான ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது நெருங்கிய பெண் கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல் தொடர்பான 2015-ஆம் ஆண்டு அவதூறு வழக்குக் கோப்புகளைப் பகிரங்கமாக வெளியிட அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட வெர்ஜீனியா ஜுஃப்பரே என்பவர் மேக்ஸ்வெல்லுக்கு எதிராகத் தொடர்ந்த இந்த சிவில் வழக்கின் ஆவணங்களில், பல முக்கிய நபர்களின் பெயர்கள் மற்றும் ரகசியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.புவியியல் வரைபடங்களை ஆராய்வது

இக்கோப்புகளில் தங்களின் தனிப்பட்ட தகவல்கள், பாலியல் வாழ்க்கை தொடர்பான விவரங்கள் மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் உள்ளதால் இவற்றைத் திறக்கக் கூடாது என மேக்ஸ்வெல்லின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டனர். இருப்பினும், பொதுமக்களின் அறிந்துகொள்ளும் உரிமையைக் சுட்டிக்காட்டிய நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி, எதிர்தரப்பு வாதங்களை நிராகரித்து ஆவணங்களை வெளிப்படையாகப் பகிரங்கப்படுத்த உத்தரவிட்டார்.

தற்போது திறக்கப்படவுள்ள இந்த ரகசியப் பக்கங்களில், 2015-ஆம் ஆண்டில் எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட தனிப்பட்ட மின்னஞ்சல்கள், வழக்கின் விசாரணை வாக்குமூலங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொடர்புடைய மூன்றாவது நபர்களின் விவரங்கள் அடங்கியுள்ளதாக செய்திக் குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இக்கோப்புகள் வெளியானால் சர்வதேச அளவில் செல்வாக்குமிக்க பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

ஏற்கனவே எப்ஸ்டீன் விவகாரத்தில் அமெரிக்க நீதித் துறை மற்றும் எப்.பி.ஐ (FBI) அமைப்புகள் பல்வேறு கட்ட விசாரணை ஆவணங்களை வெளியிட்டு வரும் நிலையில், இந்த 2015-ஆம் ஆண்டு சிவில் வழக்கு ஆவணங்கள் வெளியாவது மேக்ஸ்வெல்லின் சட்டப் போராட்டங்களுக்கும், வழக்கின் விசாரணைக்கும் மேலும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.