ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒரே வழி ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க வேண்டும்:

புரட்சிகர காவல் படை திட்டவட்டம்

‘ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும்’ என ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் போரால் கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. அவ்வழியாக அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானுடன் ஓமன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது என்பதை ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புரட்சிகர காவல் படையின் செய்தி தொடர்பாளர் சர்தார் மொஹேபி அரசு செய்தி நிறுவனமான தஸ்னிமுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது ஈரானின் குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் நிபந்னைகளுக்கு உட்பட்டது.

ஓமனுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுடன் இதற்கு தொடர்பு இல்லை. எங்களை பொருத்த வரை ஹார்முஸ் ஜலசந்தி வெறும் பொருளாதார நீர்வழிப் பாதை மட்டுமல்ல. அது புவியியல் மற்றும் வெளியுறவு சக்தியின் அங்கம். எனவே ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக் கொண்டு பிராந்திய பேச்சுவார்த்தைகளில் தலையிடுவதை நிறுத்தினால் மட்டுமே இந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படும்’’ என கூறி உள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தொடர்ந்து அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்க ஏற்றுக் கொள்ளும் சூழல் வரும் என்றும் இப்போரில் வெற்றி தங்கள் பக்கம் இருப்பதாகவும் ஈரான் தலைவர்கள் நம்புகின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி 75 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு எண்ணெய் அமைச்சர் பாசெம் முகமது குதைர் தெரிவித்துள்ளார். போருக்கு முன் ஈரான் நாள் ஒன்றுக்கு 34 லட்சம் பீப்பாய் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 27 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்து அதில் 15 லட்சம் முதல் 17 லட்சம் வரை ஏற்றுமதி செய்வதாக அவர் கூறி உள்ளார்.