இந்தியர்கள்அமெரிக்காவில் வேலை இழந்தால் 60 நாள் அவகாசம் டிரம்ப் அரசு

 

அமெரிக்காவில் வேலை இழந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் உடனே வெளியேற வகை செய்யும் புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் குடியேற்ற நோக்கமற்ற விசா வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், வேலையை இழந்த பிறகு புதிய வேலை தேடுவதற்கு அனுமதிக்கப்படும் 60 நாள் அவகாசத்தை ரத்து செய்வதற்கான திட்டத்தை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் இத்திட்ட முன்மொழிவு தற்போது கூட்டாட்சி நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளதாக அதன் இணையதளம் தெரிவிக்கிறது. இத்திட்டம் இறுதி செய்யப்பட்டால், குறிப்பிட்ட சில முதன்மை குடியேற்ற நோக்கமற்ற விசாதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் 60 நாள் அவகாசம் ரத்து செய்யப்படும். அதாவது, விசாதாரரின் தங்கும் காலம் முடிவதற்கு முன்பே அவர்களின் வேலை முடிவுக்கு வந்தால், இந்த அவகாசம் கிடைக்காது.

அவர்களும், அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். ‘அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள்’ அமைப்பு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த விசா நிலைத் தவறை மன்னிக் காத பட்சத்தில், அவர்களால் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசா நிலையையோ அல்லது வேலையளிப்பவரையோ மாற்றிக்கொள்ள முடியாது. இந்த புதிய நடைமுறையால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.