இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து நாளாந்தம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். சில தருணங்களில் சீராக இல்லாமல் சிறிய அளவில் இடைவெளியை விட்டு மீண்டும் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது.. அவர்களுடைய தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு, ஒருவித அசௌகரியமும், வலியும் ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பிற்கு தற்போது ஐஸ் பாத் தெரபி என்றும் ,பனிக்கட்டி குளியல் சிகிச்சை என்றும் வழங்கப்படும் பிரத்யேக நவீன சிகிச்சை அறிமுகம் ஆகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிக்குப் பிறகு தசைகளில் ஏற்படும் இறுக்கம்- குருதி ஓட்ட இடையூறு- மன அழுத்தம்- போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அதிலிருந்து உடனடியாகவும் முழுமையாகவும் நிவாரணம் அளிக்க தற்போது ஐஸ் பாத் தெரபி எனும் சிகிச்சை அறிமுகம் ஆகியிருக்கிறது. இத்தகைய சிகிச்சையில் மிகவும் குளிர்ந்த பனிக்கட்டிகளுடன் கூடிய நீரில் சில நிமிடங்கள் பகுதியாகவோ முழுமையாகவோ மூழ்கி மேற்கொள்ளும் சிகிச்சை முறைதான் ஐஸ் பாத் தெரபி.
இத்தகைய சிகிச்சை உயர் குருதி அழுத்த பாதிப்பு -இதயப் பிரச்சனை- தோல் பாதிப்பு – ஆகியோர்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இத்தகைய சிகிச்சையை முதல்முறையாக மேற்கொள்ளும் போது ஒரு நிமிடம் வரையிலும்… சில அமர்வுகளுக்குப் பிறகு இரண்டு நிமிடங்கள் வரையிலும் மட்டுமே பாவிக்க வேண்டும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு ரத்த நாளங்கள் இயல்பு நிலைக்கு மாறுகிறது. இதன் காரணமாக வலி குறைகிறது. குளிர்ந்த நீர் தோலில் படுவதால் மூளைக்கு மின் துண்டல்கள் அனுப்பப்பட்டு, வலியை குறைக்கின்றன. திடீரென்று கடினமாக உடற்பயிற்சி செய்தால் அதனால் ஏற்படும் தசை இறுக்கங்களையும் இவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளலாம். இதனை வைத்தியர்களின் வழிமுறையின் படி மேற்கொள்ளும் போது மன ஆரோக்கியமும் மேம்படும்.
இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளும் போது சிலருக்கு தோல் பகுதியில் அலர்ஜி அல்லது எதிர்வினையான பக்க விளைவை ஏற்படுத்தும். சிலருக்கு உடலின் வெப்பநிலை குறைந்து விடும். வேறு சிலருக்கு மூன்று நிமிடங்களுக்கு மேல் இத்தகைய சிகிச்சையை தொடரும் போது நரம்பியல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.



