சீனாவில் அதிவேகமாகப் பரவும் வைரஸ்.. 79,000 பேர் பாதிப்பு –

 

சீனாவில் பருவமழை காரணமாக 2026-ஆம் ஆண்டில் முதல் முறையாக, வேகமாகப் பரவும் சுவாச நோய்த்தொற்றுகளில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலை விட கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவும் சுவாசத் தொற்றாக மாறியுள்ளது. இருப்பினும், தற்போது பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகளே இருப்பதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த முறை தொற்று பாதிப்பும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகளின்படி, ஜூலை 13 முதல் 19-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனைகளில் 16.3 சதவீதம் பேர் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தைவிட 4.3 சதவீத புள்ளிகள் அதிகமாகும்.

அதே காலகட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு 12.6 சதவீதமாக இருந்துள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் மட்டும் சீனாவில் சுமார் 79 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 130 பேருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீனாவில் தற்போது ஓமிக்ரான் வகையைச் சேர்ந்த NB.1.8.1 உருமாறிய வைரஸ் அதிகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து, முதியவர்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் ஏற்கெனவே தீவிர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், மருத்துவமனைகளிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நோயாளிகளுக்கு காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன. பொதுவாக 5 முதல் 7 நாட்களுக்குள் அவர்கள் குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடுமையான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளில் குறிப்பிடத்தக்க உயர்வு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீன சுகாதார அதிகாரி பெங் கூறுகையில் சமீபத்திய தொற்று நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டுப் பார்க்கும்போது, கடந்த ஆண்டை விட இந்த முறை கொரோனா பரவலுக்கு அதிகரித்து உள்ளது அதேசமயம், வரும் மாதங்களில் சீனாவில் சில மாகாணங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, சீனாவில் தற்போது ஓமிக்ரான் NB.1.8.1 வகை கொரோனா வைரஸ் பரவல் வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தைச் சேர்ந்த சாங் ஜாவோருய் தெரிவித்துள்ளார்.மேலும், பொதுமக்களின் சுகாதாரத்துக்கு கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய புதிய கொரோனா திரிபுகள் எதுவும் இதுவரை கண்காணிப்பில் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சமீபத்தில் பாதிப்புகள் கண்டறியப்பட்டாலும், பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகளே ஏற்பட்டுள்ளன.

இருப்பினும், சீனாவில் அதிகரித்து வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்தியாவிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.