துவைக்காத சாக்ஸ்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மற்றும் வியர்வை நிறைந்த சாக்ஸ்களுடன் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ‘அத்லட்ஸ் ஃபுட்’ எனப்படும் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம்உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் குழந்தைகள், பெண்கள் ,பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாக்ஸ் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் சாக்ஸ் பயன்படுத்துவது குறித்து நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு தவறான பழக்கம் உள்ளது. பொதுவாக சாக்ஸ் கிளியும் வரையோ அல்லது அதில் ஓட்டை விழும் வரையோ அதையே தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.ஒரு முறை அணிந்த பிறகு பார்க்க சுத்தமாக தெரிந்தாலும், அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள்.
அதன்பிறகு அதனை மீண்டும், மீண்டும் துவைக்காமல் அணிந்து செல்கின்றனர். ஆனால் ஒரு சின்ன அலட்சியம் நம்முடைய ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்று உலக சுகாதார துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார துறை அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: வெறும் நாகரிகத்திற்காக மட்டுமின்றி வெளிப்புற அழுக்குகள் காற்றில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை தொற்றுகளில் இருந்து நமது பாதங்களை பாதுகாப்பது முதன்மையான கடமையாகும்.துவைக்காமல் சாக்ஸ்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மற்றும் நீண்ட நேரம் வியர்வை நிறைந்த சாக்ஸ்களை அணிந்தபடி இருப்பது கால்களில் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.
குறிப்பாக, தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் அதிகமாக வியர்க்கும் நபர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.காலில் ஏற்படும் பொதுவான பூஞ்சைத் தொற்றுகளில் ஒன்றாக ‘அத்லட்ஸ் ஃபுட்’ (Athlete’s Foot) எனப்படும் தொற்று உள்ளது. இது பெரும்பாலும் கால் விரல்களுக்கு இடையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஈரப்பதம் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் பூஞ்சைகள் வேகமாக வளர்வதால், நீண்ட நேரம் ஈரமான சாக்ஸ்களை அணிந்திருப்பது தொற்று ஏற்படுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது.
இந்தத் தொற்று ஏற்பட்டால் முதலில் கால் விரல்களுக்கு இடையில் அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். தொடர்ந்து தோல் சிவந்து போதல், வீக்கம், தோல் உலர்ந்து வெடித்தல்,உரிதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிய கொப்புளங்களும் தோன்றலாம். தொற்று அதிகரித்தால் நடக்கும்போதும், காலணிகளை அணியும்போதும் அசௌகரியம் ஏற்படலாம்.குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வியர்ப்பதால் சாக்ஸ்கள் ஈரமாகிவிடும். அவற்றை நீண்ட நேரம் மாற்றாமல் அணிந்திருப்பது காலில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், துவைக்காமல் பயன்படுத்திய சாக்ஸ்களை மீண்டும் அணிவதும் பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.இதனைத் தவிர்க்க தினமும் சுத்தமான, உலர்ந்த சாக்ஸ்களை அணிவது முக்கியம். பயன்படுத்திய சாக்ஸ்களை நன்றாகத் துவைத்து, முழுமையாக உலர்த்திய பிறகே மீண்டும் பயன்படுத்த வேண்டும். உடற்பயிற்சிக்குப் பிறகு கால்களை சுத்தமாகக் கழுவி, குறிப்பாக விரல்களுக்கு இடையில் ஈரப்பதம் இல்லாதபடி நன்றாகத் துடைக்க வேண்டும். காலணிகளையும் அவ்வப்போது காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது.இல்லையென்றால் நாளடைவில் பெரிய தோல் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) எச்சரித்துள்ளது.



