அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்துக்கு அருகில் உள்ள பெரிங் கடலில் கவிழ்ந்த படகின் உடைந்த பாகமொன்றை பிடித்துக்கொண்டு இரண்டு நாட்களாக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், பாதுகாப்பாக மீட்கப்பட்டதோடு, சிறுவனுடன் பயணித்த இருவர், முன்னதாக நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை அலஸ்காவைச் சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா (Derek Parker Aghnaanga) என்ற 15 வயது சிறுவன் தனது சகோதரன் (வயது 35), மைத்துனன் (வயது 34) ஆகிய உறவினர்கள் இருவருடன் மீன் பிடிப்பதற்காக படகொன்றின் ஊடாக பெரிங் கடலுக்குச் சென்றுள்ளான்.
செயின்ட் லோரன்ஸ் தீவுக்கு அருகில் பெரிங் கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிறுவனுடன் சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அடித்துச் செல்லப்பட்ட படகின் உடைந்த பாகமொன்றை பிடித்துக்கொண்டு சிறுவன் மட்டும் உயிருக்குப் போராடியபடி நடுக்கடலில் சிக்கித் தவித்துள்ளான்.
இந்நிலையில், படகில் பயணித்தவர்கள் வீடு திரும்பவில்லை என்பதை ஞாயிற்றுக்கிழமை (6)இரவு, அலஸ்கா பொலிஸார், கடலோர காவற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.
அதனையடுத்து, திங்கட்கிழமை (7) காலை 10.30 மணியளவில் கடலோர காவற்படையினர், “நோர்த்வெஸ்ட் எக்ஸ்ப்ளோரர்” படகைக் கொண்டு சிறுவனை மீட்க, அப்படகினரை கடலுக்குள் அனுப்பினர்.
அதனையடுத்து, இரண்டு நாட்களாக படகின் ஒரு பாகத்தை பற்றிக்கொண்டு நடுக்கடலில் தத்தளித்த சிறுவனைக் கண்டு, பாதுகாப்பாக மீட்ட, மீட்புக் குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுவன், தனது சகோதரனும் மைத்துனனும் நீரில் மூழ்கி உயிரிழப்பதை கண்முன்னே பார்த்ததாக மீட்புக் குழுவினரிடம் தெரிவித்துள்ளான்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட படகின் கெப்டன் ஆடம் வைட் கூறுகையில், “ நாங்கள் படகில் சென்றுகொண்டிருந்தபோது தொலை தூரத்தில் ஒரு விசித்திரமான பொருள் மிதப்பதைப் பார்த்தோம். உடனே எங்களது படகில் ஒலி சமிக்ஞையை சில முறை எழுப்பினோம்.
கவிழ்ந்த படகினை நெருங்க நெருங்க, அப்படகின் மேலே ஒரு மனிதன் உயிருடன் அமர்ந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது.
அது நம்பமுடியாத தருணம். அந்த இடம் மிகவும் குளிராக இருந்தது. நீரின் வெப்பநிலையும் 10 டிகிரி செல்சியஸாக மட்டுமே இருந்தது” என்றார்.
“பற்கள் நடுநடுங்க எங்களுடன் பேசிய சிறுவன், தனது சகோதரன் இன்னமும் கவிழ்ந்த படகுக்கு அடியிலேயே இருப்பதாகவும், தான் மீட்கப்பட்டதற்கு முதல் நாள் இரவில் தனது மைத்துனன் படகின் மேல் பகுதியிலிருந்து நழுவி நீரில் மூழ்கியதாகவும் கூறினான்” என்றார்.
சிறுவன் மீட்கப்பட்டபோது அவன் உடலானது வெப்பநிலை குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் அச்சிறுவனை, படகு ஊழியர்கள் போர்வைகளால் போர்த்தி, படகில் நோம் பகுதியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
சிறுவனை அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக, அழைத்துச் சென்ற படகு ஊழியர்கள் சிறுவனிடம் தொடர்ந்து பேசியபடி பயணித்துள்ளனர்.
தனது சகோதரன் மற்றும் மைத்துனன் நீரில் மூழ்கி உயிரிழந்த பிறகு, படகின் மேலே தொடர்ந்து பல மணிநேரமாக உணவு, தண்ணீர் இன்றி உட்கார்ந்திருந்த சிறுவனின் நலனுக்காகவும் அவனது குடும்பத்தினருக்காகவும் ஆதரவுக்கரம் நீட்டும் விதமாக நிதி திரட்டும் பணிகள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன.



