டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் தீவிரவாதத்திற்கு உதவியாக குற்றம்சாட்டியிருக்கும் ரஷ்யா, அவரை சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் நிறுவனர் பாவெல் துரோவ். ரஷ்யாவில் பிறந்து தனது தொழில் வாழ்க்கையை தொடங்கிய துரோவ் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில், டெலிகிராம் நிறுவனர் துரோவ் தீவிரவாதத்திற்கு உதவுவதாக ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பான் எப்எஸ்பி விடுத்துள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவில் நாசவேலை, தீவிரவாத செயல்கள், கொலைகள் மற்றும் இணைய மோசடிகளை செய்வதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் உக்ரைன் உளவு நிறுவனங்கள், தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படும் பல சேனல்கள், சேட்கள் மற்றும் பாட்களை டெலிகிராம் செயலி அகற்றத் தவறியது.
இதன் விளைவாக பல மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நாசவேலை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக ரஷ்யர்களை மூளைச்சலவை செய்து ஆட்சேர்ப்பு செய்ய டெலிகிராமில் பிரபலமான டேட்டிங் சாட்பாட்டை உக்ரைன் பாதுகாப்பு சேவைகள் பயன்படுத்துகிறது’ என குற்றம்சாட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து துரோவ் சர்வதேச தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு, அதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், துரோவுக்கு ரஷ்யாவில் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படக் கூடும். இது குறித்து டெலிகிராம் நிறுவனம் உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் துரோவ் அளித்த பேட்டியில், ரஷ்ய அதிகாரிகள் தனக்கு எதிராக விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் இது தனியுரிமை மற்றும் பேச்சுரிமையை ஒடுக்கும் முயற்சி என்றும் டெலிகிராம் சேவையை கட்டுப்படுத்த அவர்கள் போலியான காரணங்களை கூறுவதாகவும் கூறியிருந்தார்.
* பணிய வைக்கும் முயற்சியா?
அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய அரசு இணையத்தை கட்டுப்படுத்த பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடுமையான சட்டங்கள், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற பிரபல சமூக ஊடக தளங்கள் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ளன. யூடியூப் சேவையின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
சிக்னல், வைபவர் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளும் முடக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப், டெலிகிராம் சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெலிகிராமை தொடங்குவதற்கு முன் துரோவ் உருவாக்கிய பேஸ்புக் போன்ற பிரபல ரஷ்ய சமூக ஊடக தளமான விகே, ரஷ்ய அரசு ஆதரவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2018-2020ல் டெலிகிராம் செயலியை முடக்க ரஷ்யா முயன்றாலும் தோல்வி அடைந்தது.
* பிரான்சில் கைதானவர்
டெலிகிராம் செயலி மீது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் புகார்கள் உள்ளன. இந்தியாவின் நீட் வினாத்தாள் கசிந்ததாக போலி தகவல்கள் பரப்ப டெலிகிராம் பயன்படுத்தப்படுவதாக சமீபத்தில் சில நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது. அதே போல, போதைப்பொருள் கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான படங்களை பரப்புதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக டெலிகிராம் பயன்படுத்தப்படுவதால் 2024ல் துரோவ் பிரான்சில் கைது செய்யப்பட்டார். மார்ச் 2025ல் அவர் துபாய் திரும்பியது குறிப்பிடத்தக்கது



