மெலனியா டிரம்பைக் கொல்லத் திட்டம் வகுத்து ஈரான் வீடியோ வெளியீடு

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் அவரது 20 வயது மகன் பாரன் டிரம்ப் ஆகிய இருவரையும் இலக்கு வைத்து, ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் கொடூரமான கொலை மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மெலனியாவை எங்கே, எப்படிப் படுகொலை செய்வது?” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், அவர் செல்லும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு விவரங்கள் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பாரசீக மொழியில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், நியூயார்க்கில் உள்ள பல ஆடம்பர ஃபேஷன் கடைகளுக்கும் வர்த்தக மையங்களுக்கும் மெலனியா டிரம்ப் அடிக்கடி செல்வதைச் சுட்டிக்காட்டி, அவரது ஆடம்பர ஆடை விருப்பமே அவருக்குப் பலவீனமாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் வாங்கும் ஆடைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஆபத்தான விஷ ரசாயனங்களைத் தூவி தாக்குதல் நடத்தலாம் என “உலகளாவிய சுதந்திரப் போராளிகளுக்கு” அழைப்பு விடுக்கும் வகையில் அந்த வீடியோ நகர்கிறது.

வீடியோவின் இறுதிக்கட்டத்தில், அதிபர் டிரம்பின் இளைய மகனான பாரன் டிரம்பின் புகைப்படத்தைக் காண்பித்து, “இது ஆரம்பம் தான்ஸ பாரன் டிரம்ப், எங்களுக்காகக் காத்திருங்கள்!” என நேரடி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகத் தெஹ்ரான் நகரின் முக்கியப் பாலங்கள் மற்றும் கட்டடங்களில் டிரம்பின் குடும்பத்தினர் இறந்து கிடப்பது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த அதிநவீன வீடியோ மிரட்டல் அமெரிக்க உளவுத்துறையைக் கலக்கமடையச் செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ரகசிய பாதுகாப்புப் படை (US Secret Service), அமெரிக்க முதல் குடும்பத்தின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என உறுதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே போர்ப் பதற்றம் மற்றும் தூதரகப் பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடித்து வரும் சூழலில், அதிபரின் குடும்பத்தினரை நேரடியாக இலக்கு வைத்து ஈரான் வெளியிட்டுள்ள இந்த மிரட்டல் வீடியோ உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.