.
கர்நாடக மாநிலம் பாகல்க்கோட் மாவட்டத்தில் உள்ள கலாஹலி கிராமத்தில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரவீன் ஜிகலூர் என்ற நபர், தனது 23 வயது மனைவி பாக்யஸ்ரீ ஜிகலூர் என்பவரை கட்டையால் தாக்கி தூக்கிட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பாக்யஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் சமாதானம் பேசி அவரை ஊருக்கு அழைத்து வந்த பிரவீன், அன்று மாலையே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, பாக்யஸ்ரீ தூக்கில் தொங்கும் போது உயிருக்காக போராடுவதை பிரவீன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கும் வீடியோ கால் செய்து அவர்களது மகளின் துயரமான நிலையை நேரலையாக காட்டியுள்ளார். மேலும், இந்த வன்கொடுமை தொடர்பான வீடியோவை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிலகி காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த கொடூர கணவன் பிரவீனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவியை கொன்றுவிட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து குடும்பத்தினருக்கு அனுப்பிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



