அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: எல்ல பகுதியில் ஹோட்டலுக்கு ரூ.10 இலட்சம் தண்டப்பணம் விதிப்பு

பண்டாரவளை, கரந்தகொல்ல, எல்ல பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தமைக்காக பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் 10 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10 ஆம் திகதி குறித்த ஹோட்டலில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டக் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட விதிகளின் கீழ் பதுளை மாவட்ட அதிகாரிகளால் தொடரப்பட்ட இவ்வழக்கு, கடந்த ஜூலை 22 ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குறித்த ஹோட்டல் நிர்வாகம் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டது.

குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு ரூ. 10 இலட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறி அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால், வேலை நேரங்களில் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.