அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் 3 பேரும், சராய்தியோ மாவட்டத்தில் ஒருவரும் பலியானதைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 66 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சிவசாகர், சராய்தியோ, ஜோர்காட் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 6.54 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 810 கிராமங்கள் நீரில் மூழ்கி 34,970.8 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் 143 சாலைகள், 10 கரைப்பாதைகள் சேதமடைந்துள்ளதுடன், 4.54 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டு, 3,021 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சிவசாகர் நிவாரண முகாம்களை பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால், ‘அசாமில் வெள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.Executive Branch



