ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த ஒரு வாரமாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானின் உள்கட்டமைப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.
அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் 517 பேர் காயம் அடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர். அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டாளி நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் ட்ரோன் ஒன்றை சனிக்கிழமை தகர்க்கும்போது மற்றொரு அமெரிக்க வீரர் இறந்ததாக அமெரிக்க ராணுவம் கூறியது. இதற்கு அடுத்த சில மணி நேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஒன்பதாவது இரவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
இதற்கு பதிலடியாக அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இரு தரப்பினரும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சிவில் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வரும் வேளையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை நேற்று 90 டாலருக்கு மேல் உயர்ந்தது. இது போரால் உருவான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.



