அதிக உப்பு சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமா? உப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள மறைமுக தொடர்பு மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் விளக்குகிறார்.
தினசரி சமையலில் உப்பு இல்லாத உணவை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி உப்புக்கு மிகச்சரியாக பொருந்தும். அதிகப்படியான உப்பு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை உண்டாக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், அதிக உப்பு சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருமா? உப்பு நிறைந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை நேரடியாக அதிகரிக்குமா? என்ற கேள்விகளும் பலரிடம் எழுகின்றன.
இதுகுறித்து பெங்களூரை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் திருமதி. எட்வினா ராஜ் கூறியதாவது, “உப்பு நேரடியாக நீரிழிவு நோயை ஏற்படுத்துவது இல்லை. ஆனால், தொடர்ந்து அதிக உப்புள்ள உணவுகளை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை மறைமுகமாக அதிகரிக்கக்கூடும்” என்கிறார்.
உப்பு நேரடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது கிடையாது. ஆனால், அதிக உப்பு உள்ள உணவுகள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்டதாகவும், அதிக கலோரிகள் கொண்டதாகவும் இருக்கின்றன. உதாரணமாக, உருளைக்கிழங்கு சிப்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், ஃபாஸ்ட் ஃபுட், பாக்கெட் தின்பண்டங்கள் போன்றவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் மற்றும் அதிகப்படியான கலோரி நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடல் எடையை அதிகரித்து உடல் பருமனுக்கும் வழிவகுக்கின்றன. உடல் பருமன் என்பது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான மிக முக்கியமான ஆபத்துக் காரணிகளில் ஒன்றாகும்.
உயர் ரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாத அபாயம் அதிகரிக்கும்
இதய நோய் நீரிழிவு உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு அபாயம் மேலும் அதிகம்
சிறுநீரக பாதிப்பு அதிக சோடியம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம்
உடல் எடை கூடுதல் உடல் பருமன் டைப் 2 நீரிழிவு அபாயத்தை உயர்த்தும்
அதிக உப்பு நுகர்வு ஏற்படுத்தும் மற்றொரு முக்கிய பிரச்சனை
உப்பு நிறைந்த உணவுகள் மக்களுக்கு அதிக தாகத்தை ஏற்படுத்துகின்றன. அப்போது தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, சிலர் குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் அல்லது பிற இனிப்பு பானங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். தொடர்ந்து சர்க்கரை பானங்களை அருந்துவது, ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்; உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்; காலப்போக்கில் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, சர்க்கரை பானங்களுக்கு பதிலாக தண்ணீரைத் தேர்ந்தெடுப்பது நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாகும்.
பெரியவர்கள் ஒரு நாளைக்கு 5 கிராம்-க்கு(சுமார் 1 டீஸ்பூன்) குறைவான உப்பையே உட்கொள்ள வேண்டும். இத்துடன் வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல், போதிய தூக்கம் மற்றும் சிகரெட் பிடித்தலை தவிர்த்தல் ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும், நீரிழிவு நோய் மற்றும் அதன் பக்கவிளைவுகளின் அபாயத்தையும் பெருமளவு குறைக்கும் என்கிறார்.மருத்துவ நிபுணர்



