எம்மில் சிலருக்கு இரவில் உறங்கி, காலையில் கண் விழிக்கும் போது திடீரென காது கேளாமை பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு கைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென எதிரில் பேசுபவரின் குரல் கேட்காமல் இருக்கும். இத்தகைய பாதிப்பை திடீரென்று ஏற்படும் செவித்திறன் இழப்பு என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதற்கு உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று முறையான சிகிச்சையை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
திடீரென்று ஏற்படும் காது கேளாமை பாதிப்பு என்பது சிலருக்கு ஒரு காதிலும் ஏற்படலாம். வேறு சிலருக்கு இரண்டு காதிலும் ஏற்படலாம். குறிப்பாக நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
திடீரென்று ஒலிக்கும் அதீத சப்தம், உறக்கத்திலிருந்து எழும்போது திடீரென கேட்கும் திறன் பாதிப்பு ,கை பேசியுடன் தொடர்பில் இருக்கும் போது ஏற்படும் ஒலி அளவு குறைபாடு, உங்களுடைய இயல்பான குரலில் மாற்றம், தலை சுற்றல், காதுகளில் ஏற்படும் அசௌகரியம் என பல்வேறு அறிகுறிகள் மூலம் இந்த பாதிப்பை உணரலாம்.
எம்முடைய காதுகளில் சேரும் மெழுகு, ஒவ்வாமை, சைனஸ் தொற்று, சளி பாதிப்பு ..என பல வித காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம். வெளி காது- நடு காது- ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அதற்கு நிவாரண சிகிச்சை போதுமானது. ஆனால் உள் காது பகுதியில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக திடீரென்று செவித்திறன் இழப்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால்… அதற்கு உடனடியாக வைத்தியரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்கேற்ற நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் பெற வேண்டும் .
வேறு சிலருக்கு தொற்று பாதிப்பு, தலையில் காயம் அல்லது அதிர்ச்சி, சுற்றுச்சூழல் பிரச்சனை, அகௌஸ்டிக் நியுரோமா எனப்படும் செவி நரம்புகளில் ஏற்படும் கட்டி பாதிப்பு ஆகிய காரணங்களாலும் திடீரென்று செவித்திறன் இழப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு காதுகளுக்கான இயல்பான ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு உண்டாகும்.
வைத்தியர்கள் மேற்கொள்ளும் பரிசோதனையில்.. பாதிப்பு எங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானிப்பார் இத்தகைய தருணங்களில் பாதிப்பினை உறுதிப்படுத்துவதற்காக சிலருக்கு வைத்தியர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மற்றும் குருதி பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கலாம்.இத்தகைய தருணத்தில் ஸ்டீராய்டு மருந்துகள் மூலமும் நிவாரணம் வழங்குவார்கள்



