நள்ளிரவில் மது மயக்கம், எம்.எஸ்.வியை தூங்க விடாத கண்ணதாசன்; காலையில் உதித்த மெகாஹிட் பாடல்

 

 

இன்னைக்கு நீ போய் நிம்மதியா தூங்குடா, காலையில உனக்கு முன்னால நான் வரலையான்னு பாரு” என்று விஸ்வநாதனுக்குப் பதில் சொன்னார்.

புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சிருக்கும் வரை’ திரைப்படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய சம்பவம் குறித்து இயக்குனரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்

.

இது குறித்து பேசிய அவர், ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான ‘நெஞ்சிருக்கும் வரை’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில், கடைசிப் பாட்டை கம்போஸ் செய்வதற்காக இயக்குனர் ஸ்ரீதர், இசைமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

நாளைக்கு நம்ம கம்போஸ் பண்ணப் போற பாட்டு ஒரு முக்கியமான பாட்டு. படத்தினுடைய உயிர்நாடியான ஒரு கட்டத்தில் இந்த பாட்டு இடம் பெறும். இப்போ எல்லாரும் சீக்கிரமா படுத்துத் தூங்குங்க, காலையில ஃபிரஷா ஒரு 7 மணிக்கு வந்தால், அந்த பாட்டைக் கம்போஸ் பண்ணி முடிச்சுடலாம்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீதர் கிளம்பிச் சென்றார்.

ஸ்ரீதர் போனவுடனேயே, இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு எம்.எஸ். விஸ்வநாதன் படுக்கப் போனார். இரவு 9:30 மணிக்கு பக்கத்து அறையில் இருந்து பாட்டுச் சத்தமும், அரட்டைச் சத்தமும் பயங்கரமாகக் கேட்டது.

அங்கே என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக எம்.எஸ். விஸ்வநாதன் பக்கத்து அறைக்குப் போய்ப் பார்த்த போது, அங்கே கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய தோழர்களோடும் தோழிகளோடும் உற்சாகமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். மதுக் கோப்பைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.

இதனைப் பார்த்த விஸ்வநாதன், “என்ன கவிஞரே, காலையில எல்லாரும் சீக்கிரம் வந்துருங்க, இந்த பாட்டைக் கம்போஸ் பண்ணி முடிச்சிடலாம்னு அவ்வளவு சொல்லிட்டுத்தானே ஸ்ரீதர் போனாரு? அப்படி இருக்கும்போது இந்த கூத்தும் கும்மாளமும்? இதையெல்லாம் பாட்டு கம்போஸ் பண்ணி முடிச்ச பிறகு நாளைக்கு வெச்சுக்கக்கூடாதா?” என்று கேட்டார்.

அதற்கு கண்ணதாசன், “இன்னைக்கு நீ போய் நிம்மதியா தூங்குடா, காலையில உனக்கு முன்னால நான் வரலையான்னு பாரு” என்று விஸ்வநாதனுக்குப் பதில் சொன்னார்.

அதற்கு மேல் அவரோடு பேச முடியாமல் தன் அறைக்குத் திரும்பி வந்த விஸ்வநாதனுக்குத் தூக்கம் வரவில்லை. பக்கத்து அறையில் சத்தம் குறைந்தால்தான் தூங்க முடியும் என்ற நிலை. இரவு இரண்டு மணி அளவில் தன்னுடைய விருந்தினர்கள் அனைவரையும் ஒருவழியாக வழி அனுப்பி வைத்தார்

கவிஞர் கண்ணதாசன். ஆனால், அதன்பிறகு கையில் ஒரு மதுக் பாட்டிலோடு சோஃபாவில் வந்து உட்கார்ந்து உட்கார்ந்த கண்ணதாசன் எம்.எஸ்.வியுடன் பேசிக்கொண்டே இருந்துள்ளார்

அதைப் பார்த்தவுடனேயே விஸ்வநாதனுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது. “அண்ணா நீங்க பண்றது நல்லா இருக்கா? இதெல்லாம் ஸ்ரீதருக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்” என்று அவர் சொல்ல, “ஸ்ரீதருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? நீ போய் சொன்னால்தான் தெரியும். நீ என் வாயைக் கிளறாதே” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள்ளே சென்ற கவிஞர் கண்ணதாசன், கதவை மூடிக்கொண்டார்.

மறுநாள் காலையில் 7 மணிக்கு கம்போசிங்குக்குத் தயாராக, எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும் வந்த நிலையில், கணணதாசன் 9:30 மணியாகியும் க வரவில்லை.

இதனால் ஆத்திரத்தில் ஸ்ரீதர் சத்தம் போட, முதல் நாள் இரவில் என்ன நடந்தது என்று எம்.எஸ்.வி சொல்ல, அப்போதே வந்துவிட்டார். அவரை பார்த்த இயக்குனர் ஸ்ரீதர், “”நேற்று ராத்திரி பூரா நீங்க தூங்கவே இல்லையாமே, இரண்டு மணிக்குக் கூட கையில் ஒரு பாட்டிலோடு இருந்தீங்களாமே என்று கேட்க, கண்ணதாசன் எம்.எஸ்.வியை பார்த்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே கம்போசிங் தொடங்கியது. “நீங்கள் முதலில் பாட்டை எழுதுங்கள், அதற்கு நான் இசையமைக்கிறேன்” என்று எம்.எஸ். விஸ்வநாதன் சொல்ல, “வேண்டாம் வேண்டாம், நீ மெட்டைப் போடு, நான் பாட்டைச் சொல்றேன்” என்றார் கண்ணதாசன். உடனே விஸ்வநாதன் மெட்டை (லா லா லா…) வாசிக்க ஆரம்பித்தார். அந்தப் பாடலுக்கான பல்லவி மற்றும் சரணங்களை கவிஞர் கண்ணதாசன் சொல்ல, சில நிமிடங்களிலேயே அந்தப் பாடலுக்கான கம்போசிங் முழுமையாக முடிவடைந்தது. அதுதான் சொன்னது நீதானா என்ற பாடல்.