வெடித்து எரியும் ஃபுவேகோ எரிமலை! மக்கள் அவசரமாக வெளியேற்றம்!

 

குவாத்தமாலா சிட்டி: மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ‘ஃபுவேகோ’ எரிமலை திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது. இதையடுத்த அதன் சரிவுப் பகுதிகளில் இருந்து கொதிக்கும் லாவா குழம்புகளும், அடர்ந்த சாம்பல் புகையும் வேகமாக வெளியேறி வருவதால், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

எரிமலையிலிருந்து சுமார் 6,000 மீட்டர் (கிட்டத்தட்ட 20,000 அடி) உயரத்திற்குச் சாம்பல் மற்றும் வெப்ப வாயுக்கள் வளிமண்டலத்தில் சீறிப் பாய்ந்து வருகின்றன. இதனால் அருகில் உள்ள எல் பொர்வெனிர் மற்றும் லாஸ் லஜிதாஸ் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குவாத்தமாலா பேரழிவு மேலாண்மை முகமை அப்பகுதியில் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்துள்ளது.

பாதிப்பு நிலவும் சாக்கதேபெக்ஸ் , எஸ்குவிண்ட்லா மற்றும் சிமால்டெனங்கோ ஆகிய மாகாணங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், எரிமலைக்கு அருகில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 14 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் மழை மற்றும் மழைக்கால சேற்றுப் பெருக்கினால் அடுத்த 72 மணி நேரம் மிகவும் ஆபத்தானது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மத்திய அமெரிக்காவிலேயே மிகவும் தீவிரமாகச் செயல்படும் எரிமலைகளில் ஒன்றான ஃபுவேகோ, கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடூரமான வெடிப்பின் போது 200-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் எரிமலை சீற்றம் அடைந்துள்ளதால், உள்ளூர் வாசிகள் முகக்கவசம் அணியவும், குடிநீர்த் தொட்டிகளை மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசர உதவி மற்றும் மீட்புக் குழுவினர் அப்பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.