நீரிழிவு சிகிச்சை என்பது ஏன் அவசியம்?

‘‘நீரிழிவு சிகிச்சை என்பது இனி ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது மட்டுமல்ல. அது நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பது, நோய் நமது வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பே நாம் நமது வாழ்க்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பற்றியதாகும்…’’ என்கிறார் மூத்த நீரிழிவு நோய் நிபுணர்

 

வேண்டியவை. ஒவ்வொரு ஆண்டும் சோர்வு, அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் தோன்றிய பின்னரே லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கு நீரிழிவு இருப்பதை அறிகின்றனர். சிலர், கண்கள், சிறுநீரகங்கள், இதயம் அல்லது பாதங்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பின்னரே நோயைக் கண்டறிகின்றனர்.

இதில் நமக்கான செய்தி மிகவும் எளிமையானது. ஆரம்பத்திலேயே செயல்படுங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதைத் தாண்டிய நீரிழிவு பராமரிப்பு

பல ஆண்டுகளாக, நீரிழிவு சிகிச்சை என்பது முக்கியமாக ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதில் கவனம் செலுத்தி வந்தது. இது இன்னும் முக்கியமானதாக இருந்தாலும், சிறந்த நீரிழிவு பராமரிப்பு அதையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதை இப்போது நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

அதிக உடல் எடை, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு, கொழுப்பு கல்லீரல் நோய், உடல் செயல்பாடுகள் குறைவாக இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் போதிய தூக்கமின்மை ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும், அது தீவிரமடைவதற்கும் காரணமாக இருக்கலாம்.

இந்தப் பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிப்பதும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு இணையான முக்கியத்துவம் கொண்டது. ரத்தப் பரிசோதனையில் காணப்படும் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமே நமது இலக்காக இருக்கக்கூடாது. அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது மற்றும் இதய நோய் உள்ளிட்ட பிற சிக்கல்களின் அபாயத்தைக் குறைப்பது ஆகியவையும் நமது இலக்குகளாக இருக்க வேண்டும்.

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நீரிழிவு பாதிப்பு

இந்தியா நீரிழிவு நோயின் அதிகரித்து வரும் சுமையை எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாடும் இந்த நோயால் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாகும். ICMR-INDIAB தேசிய ஆய்வின்படி, இந்தியாவில் சுமார் 10.1 கோடி பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. மேலும், 13.6 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (Prediabetes) உள்ளனர்.

நீரிழிவு நோய் நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களிடையே அதிகமாகக் காணப்பட்டாலும், 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளம் வயதினரிடையேயும் இந்த நோய் அதிகரித்து வருகிறது. இளம் வயதினரிடையே நீரிழிவு அதிகரிப்பதற்கு மரபணு சார்ந்த பாதிப்பு, வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேருதல், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், அதிக கலோரி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல், போதிய உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை மற்றும் நீண்டகால மன அழுத்தம் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

வெளிப்படையாக அதிக உடல் எடை இல்லாத இந்தியர்களுக்கும் கூட ஒப்பீட்டளவில் இளம் வயதிலேயே நீரிழிவு ஏற்படலாம். இளம் வயதினரிடையே அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான ஆபத்துக் காரணி வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதாகும். உடல் எடை சாதாரணமாக இருப்பவர்களுக்கும்கூட வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு இருக்கலாம். இது இன்சுலின் எதிர்ப்பு, கொழுப்பு கல்லீரல் மற்றும் டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது.

இந்தியர்களுக்கு குறைந்த BMI (உடல் நிறை குறியீட்டெண்) அளவிலேயே மற்றும் இளம் வயதிலேயே நீரிழிவு ஏற்படக்கூடும் என்பதால், இடுப்புச் சுற்றளவு என்பது வளர்சிதை மாற்றம் சார்ந்த ஆபத்தைக் கண்டறிவதற்கான முக்கியமான குறியீடாகும்.வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளின்போது இடுப்புச் சுற்றளவை அளவிடுவது, நீரிழிவு அபாயம் உள்ளவர்களை முன்கூட்டியே அடையாளம் காணவும், அவர்களுக்குத் தேவையான பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும்.

எனவே, ஆபத்துக் காரணிகளை முன்கூட்டியே கண்டறிதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் மற்றும் உரிய நேரத்தில் ரத்தச் சர்க்கரை பரிசோதனை செய்துகொள்ளுதல் ஆகியவை மிகவும் அவசியம். குறிப்பாக, குடும்பத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அல்லது வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு சிகிச்சையில் புதிய காலகட்டம்

நீரிழிவு சிகிச்சை வேகமாக மாறி வருகிறது. GLP-1 receptor agonists மற்றும் SGLT2 inhibitors போன்ற புதிய மருந்துகள், ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்துவதுடன், உடல் எடையைக் குறைக்கவும், தகுந்த நோயாளிகளுக்கு இதய நோய், கொழுப்பு கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அபாயங்களைக் குறைக்கவும் உதவுகின்றன. Tirzepatide போன்ற புதிய இரட்டைச் செயல்பாட்டு மருந்துகள் சிகிச்சைக்கான வாய்ப்புகளை மேலும் விரிவு படுத்துகின்றன.

தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (Continuous Glucose Monitoring – CGM) என்பது நீரிழிவு பராமரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ஒரு தொழில்நுட்பமாகும். இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு எவ்வாறு மாறுகிறது என்பதை நிகழ்நேரத்தில் அறிய உதவுகிறது. இதன் மூலம் நோயாளிகளும் மருத்துவர்களும் சிறந்த சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை முடிவுகளை எடுக்க முடிகிறது.

நீரிழிவு நோயின் அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சையளிப்பதைத் தாண்டி, அதன் அடிப்படைக் காரணங்களையும், உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் சரிசெய்வதை நோக்கி புதிய நீரிழிவு பராமரிப்பு முறை நகர்ந்து வருகிறது. புதிய மருந்துகள் மற்றும் நம்பிக்கையளிக்கும் சிகிச்சை முறைகள் உருவாகி வருவதால், நீரிழிவு நோயின் முன்னேற்றத்தைக் குறைப்பதற்கும், நோய் நிவாரண நிலையை (Remission) அடைவதற்கும், சிக்கல்களைத் தடுப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

இருப்பினும், மருந்துகள் மட்டுமே தீர்வாகாது. ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, போதிய தூக்கம் மற்றும் தொடர்ந்து மருத்துவப் பராமரிப்பைப் பெறுதல் ஆகியவையே நீரிழிவு மேலாண்மையின் அடித்தளமாகும்.

நீரிழிவு பராமரிப்பில் நம்பிக்கையளிக்கும் ஒரு கருவியாக உருவெடுத்து வருகிறது. AI அடிப்படையிலான அமைப்புகள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மாறும் முறைகளைப் பகுப்பாய்வு செய்யவும், ரத்தச் சர்க்கரை அளவு ஆபத்தான வகையில் குறையும் அபாயத்தை முன்கூட்டியே கணிக்கவும், தனிநபருக்கேற்ற உணவுப் பரிந்துரைகளை வழங்கவும், நீரிழிவு ஏற்படும் அதிக ஆபத்துள்ள நபர்களைக் கண்டறியவும், நீரிழிவு விழித்திரை பாதிப்பு (Diabetic Retinopathy) போன்ற சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறியவும் உதவுகின்றன.

டிஜிட்டல் சுகாதாரத் தளங்கள் மற்றும் தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு தொழில்நுட்பங்களுடன் AI இணைக்கப்படும்போது, தனிநபருக்கேற்ற, முன்கூட்டியே செயல்படக்கூடிய மற்றும் தரவுகளின் அடிப்படையிலான நீரிழிவு மேலாண்மைக்கு வழிவகுக்கும்.

இருப்பினும், AI என்பது மருத்துவர்களின் மருத்துவ முடிவுகளுக்கும், மருத்துவர்-நோயாளி உறவுக்கும் மாற்றாக இருக்கக்கூடாது. மருத்துவ நிபுணத்துவத்தையும், அறிவார்ந்த தொழில்நுட்பத்தையும் இணைத்து சிறந்த சிகிச்சை விளைவுகளைப் பெறுவதே நீரிழிவு பராமரிப்பின் எதிர்காலமாகும்.

அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்க வேண்டாம்

ஒருவருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தென்படுவதற்கு முன்பே, நீரிழிவு நோய் கண்கள், சிறுநீரகங்கள், இதயம் மற்றும் பாதங்களைப் பாதிக்கக்கூடும். எனவே, வழக்கமான பரிசோதனைகள் அவசியம். நீரிழிவு நோயுடன் வாழ்பவர்கள், தங்களது மருத்துவரின் ஆலோசனைப்படி கண் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, இதய நோய் அபாய மதிப்பீடு மற்றும் பாதப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம், உரிய சிகிச்சையை விரைவாகத் தொடங்க முடியும். இது தீவிரமான சிக்கல்களைத் தடுக்கவும் உதவும்.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் வரை அல்லது சிக்கல்கள் ஏற்படும் வரை காத்திருக்காமல் உடனடியாகச் செயல்படுங்கள். உங்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம் இருந்தால், ரத்தச் சர்க்கரை பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் சிகிச்சைத் திட்டத்தைப் பின்பற்றுவதுடன், வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளையும் மேற்கொள்ளுங்கள்.

இந்த உலக நீரிழிவு தினத்தில், நீரிழிவு பராமரிப்பை மறுவரையறை செய்வோம். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலிருந்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதை நோக்கி நகர்வோம். ஆரம்பத்திலேயே செயல்படுங்கள். சிறப்பாக வாழுங்கள். சிக்கல்களைத் தடுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்