
சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கை மற்றும் தாய்லாந்துப் பிரஜைகளுக்கு விசா விலக்கு வழங்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ளன.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் (Sihasak Phuangketkeow) மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போதே இந்த உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்போது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் வரலாற்று, கலாசார மற்றும் மத ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான இருதரப்பு உறவுகளையும் மேலும் உறுதிப்படுத்துவதில் இந்த விசா விலக்கு உடன்படிக்கை முக்கிய மைல்கல்லாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதன் மூலம் இரு நாடுகளின் சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கான பயண நடைமுறைகள் இலகுவடைவதுடன், சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



