ஈரான் பஹ்ரைன் தொழிற்சாலை மீது தாக்குதல்

மேற்காசியாவில் தொழிற்சாலை ஒன்று ஈரானியத் தாக்குதலுக்கு இலக்காகித் தீப்பற்றி எரிந்ததாக பஹ்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை எனவும், சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.09 மணியளவில் பஹ்ரைன் முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த சிவில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகப் போராடி வருவதாக பஹ்ரைன் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற சரியான இடத்தை அரசாங்கம் வெளியிடாத போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள சித்ரா தீவுப் பகுதியில் புகை மண்டலம் எழுந்ததைத் தாம் அவதானித்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானினால் ஏவப்பட்ட பல வான்வழித் தாக்குதல்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக பஹ்ரைன் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இடைமறிக்கப்பட்ட ஏவுகணை/ட்ரோன் சிதறல்கள் விழுந்ததில் சிறிய அளவிலான பொருட் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், ஈரான் தொடர்ந்தும் விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் பஹ்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க கடற்படையின் 5 ஆவது படைப்பிரிவு நிலைகொண்டுள்ள பஹ்ரைனின் அல்-ரிஃபா மற்றும் அவாலி ஆகிய தளங்களில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்கு வைத்தே தமது விண்வெளிப் படைகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரானிய வான்பரப்பு மீறப்படுவதற்கும், தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளுக்கும் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.