மீண்டும் வழமைக்கு திரும்பியது அமெரிக்க விமானப் போக்குவரத்து

வார இறுதி நாட்களில் அமெரிக்கா முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயணிகளை விமான நிலையங்களில் தவிக்கவிட்ட அசாதாரண விமானத் தடையை அடுத்து, நேற்று திங்கட்கிழமை (16) அமெரிக்க விமானப் போக்குவரத்து சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளன.

நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும் குறைந்தது 350 விமானங்கள் மாத்திரமே இரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை விமானத் தடை பிறப்பிக்கப்பட்ட போது 9,200 விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என விமானத் தரவுத் தளமான  தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று திங்கட்கிழமை யுனைடெட் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அமைப்பில் ஏற்பட்ட தற்காலிகக் கோளாறு காரணமாகப் புறப்படும் விமானங்களில் சிறிய தாமதங்கள் ஏற்பட்ட போதிலும், அக்கோளாறு உடனடியாகச் சரிசெய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆர்கன்சாஸ் மற்றும் டெக்சாஸ் மாநிலங்களிலுள்ள பழைய வலையமைப்பு உபகரணங்களில் ஏற்பட்ட அதிகப்படியான தரவுச் சுமையால், நாட்டின் 22 பிரதான விமானக் கட்டுப்பாட்டு மையங்களில் 17 மையங்களின் தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டன.

இது சைபர் தாக்குதல் அல்லவெனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே 9/11 தாக்குதல்களுக்குப் பிந்தைய மிக நீண்ட விமானத் தடை பிறப்பிக்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம்உறுதிப்படுத்தியுள்ளது.

சீனப் பயணத்திற்காகப் புறப்படுவதற்கு முன் ஊடகவியலாளர்களிடம்பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “பழைய மற்றும் பழுதடைந்த உபகரணங்களாலும், முந்தைய நிர்வாகத்தினாலுமே இந்தக் கோளாறு ஏற்பட்டது. இதனைச் சரிசெய்ய கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி கோரி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பை நவீனமயப்படுத்த 50 பில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியை வழங்குமாறு அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி அமெரிக்க காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.