
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging:A Journey of Love’ உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதுடில்லியில் நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வில் சோனியா காந்தி தனது சுயசரிதை நூலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
‘Belonging: A Journey of Love’ என்ற இந்த நூல் சோனியா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உறவுகள், காதல், இழப்புகள் மற்றும் இந்திய அரசியலில் அவர் பயணித்த பாதை ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.
இத்தாலியில் தனது சிறுவயது வாழ்க்கையை ஆரம்பித்து, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் ராஜீவ் காந்தியைச் சந்தித்து காதல் வயப்பட்டமை, அவரைத் திருமணம் செய்து இந்தியாவில் குடியேறியமை, இந்தியக் குடும்ப மற்றும் அரசியல் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டமை உள்ளிட்ட அனுபவங்களை இந்த நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடனான குடும்ப உறவு, கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னரான வாழ்க்கை மற்றும் அரசியலில் பிரவேசித்தமை உள்ளிட்ட முக்கியமான அனுபவங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலை எழுதுவதற்கு ஆரம்பத்தில் தயக்கம் கொண்டிருந்ததாகத் தெரிவித்த சோனியா காந்தி, தனது வாழ்க்கையைப் பற்றி பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தனது கதையைத் தனது சொந்த வார்த்தைகளில் பதிவு செய்ய விரும்பியதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்த நூல் வெளியீட்டுக்கு கிடைத்த வரவேற்பு தன்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நூல் கடந்த 10ஆம் திகதி விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில், வெளியீட்டாளரான HarperCollins நிறுவனம் நவம்பர் 16ஆம் திகதி வரை சுமார் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளதாக அறிவித்துள்ளது.



