காஸா நகரில் உள்ள நிலத்தடிச் சுரங்கப்பாதையில் 7 இஸ்ரேலிய பிணையாளிகளை அடைத்து வைத்துப் பராமரித்து வந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய இராணுவத் தளபதியான முகமது அப்துல் ஃபத்தா அவாத்வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கப்பற்படை மற்றும் வான்படையின் துல்லியமான கூட்டுத் தாக்குதலின் மூலம் காஸா நகரப் பகுதியில் வைத்து முகமது அவாத் இலக்கு வைக்கப்பட்டார். போரின் போது டேனியேலா கில்போவா, கரினா அரியேவ், நமா லெவி உட்பட 7 இஸ்ரேலியப் பிணையாளிகளைப் பிடித்து வைத்து, அவர்களைக் காஸாவின் நிலத்தடிச் சுரங்கப் பாதைகளில் சிறைவைத்ததில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக இஸ்ரேல் புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
சமீபகாலமாக தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்த விதிகளைத் தொடர்ச்சியாக மீறி, இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் எல்லைப் படைவீரர்கள் மீது புதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வந்ததாகவும், ஹமாஸின் இராணுவக் கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் இஸ்ரேல் ராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த உடனடி அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், தெற்கு காஸா பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதிப் பிரிவுத் தலைவராகச் செயல்பட்டு வந்த முஹம்மது அபு அல்வான் என்பவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. போர்ச் சூழலில் ஹமாஸ் அமைப்பிற்கு 1 பில்லியனுக்கும் அதிகமான நிதியை மாற்றியதில் இவருக்குப் பங்கிருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஒரே வாரத்தில் இரண்டு முக்கிய ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



