
ஈரான் நாட்டின் மினாப் நகரில் உள்ள தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 168 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த அதிகாரிகளின் படங்களைப் பகிர்ந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் எனத் தெரிவித்து, யுஎஸ்எஸ் ஸ்ப்ரூன்ஸ் போர்க்கப்பலின் தளபதி லீ ரை டேட் மற்றும் நிர்வாக அதிகாரி ஜெப்ரி இ யார்க் ஆகிய இருவரின் பெயர்களையும் புகைப்படங்களையும் ஈரான் தரப்பு பகிரங்கப்படுத்தியது. “நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம்” என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிவுகள் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகக் குறிவைக்கப்பட்டுள்ள இந்தக் கடினமான சூழல் வாஷிங்டன் வட்டாரத்தில் பாதுகாப்பு எச்சரிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஈரானின் இந்த வெளிப்படையான மிரட்டல் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மோதலை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகக் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



