கடந்த 2009-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு 216 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் ‘ஏஎஃப் 447’ (AF447) விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பிரான்ஸ் வான்வழிப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிக மோசமான இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 228 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து நடந்து 17 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பாரிஸ் நீதிமன்றம், விபத்துக்குக் காரணமான ஏர்பஸ் (Airbus) விமானத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஏர் பிரான்ஸ் (Air France) விமான நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களுமே அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, அவற்றை ‘கார்ப்பரேட் நரபலி’ (Corporate Manslaughter) குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. முன்னதாக 2023-ஆம் ஆண்டில் கீழ் நீதிமன்றம் இந்த இரு நிறுவனங்களையும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்திருந்த நிலையில், தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த தீர்ப்பைத் தலைகீழாக மாற்றி, இரு நிறுவனங்களுக்கும் தலா 2,25,000 யூரோக்கள் (சுமார் 2.6 லட்சம் அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.




