அமெரிக்காவில் விமான போக்குவரத்து திடீர் முடக்கம்- 15 லட்சம் பயணிகள் தவிப்பு

 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் முடக்கப்பட்ட விமான சேவைகள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீண்டும் தொடங்கின. அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு முழுவதும் அனைத்து விமான சேவைகளும் அதிரடியாக நிறுத்தப்பட்டன. அந்த வரலாற்று சம்பவத்திற்கு பிறகு, தற்போது மிகப்பெரிய அளவில் வான்வழி போக்குவரத்து முடங்கும் நிலை அமெரிக்காவில் உருவானது. அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகத்தின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பில் நேற்று கடுமையான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானங்கள் புறப்படுவதை விமான போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டனர். இந்த திடீர் அறிவிப்பால் உலக அளவில் விமான போக்குவரத்து மிகப்பெரிய அளவில் கடுமையான பாதிப்பை சந்தித்தது.

நாடு முழுவதும் உள்ள விமான கட்டுப்பாட்டு மையங்களின் நெட்வொர்க் இணைப்பில் ஏற்பட்ட கடுமையான கோளாறே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இந்த தொழில்நுட்ப முடக்கத்தால் சுமார் 11,000 விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் 10,000 விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகவும், ஆயிரக்கணக்கான விமானங்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டன. நடுவானில் பறந்த சுமார் 800 விமானங்கள் வேறு நகரங்களுக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் சுமார் 15 லட்சம் பயணிகள் தங்களின் உடைமைகளுடன் செய்வதறியாது தவித்தனர். ஏர் இந்தியா மற்றும் ஏர் கனடா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் விமானங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.புவியியல் காண்

இந்த இக்கட்டான சூழலில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க்வேன் முல்லின் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘இந்த தொழில்நுட்ப குழப்பத்திற்கு எந்தவித சதி அல்லது சைபர் தாக்குதலும் காரணமில்லை’ என்று உறுதிபட தெரிவித்தார். தற்போது கோளாறுகள் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு விமானங்கள் படிப்படியாக மீண்டும் புறப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஏஐ தொழில்நுட்ப மென்பொருள் அப்டேட் காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. விமானங்கள் மற்றும் ஊழியர்கள் சரியான இடங்களுக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என்பதால், பயணிகள் விமான நிலவரங்களை செல்போன் ஆப் மூலம் சரிபார்க்குமாறு விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.