காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் பாக்டீரியா வயிற்றுக்குள் போகுமா?

 

காலையில் பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா? இதனால் பற்களுக்கு என்ன நன்மை கிடைக்கும், பல் துலக்கிய பிறகு ஏன் 30 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்பதை பல் மருத்துவர் விளக்குகிறார்.

நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை கொண்டிருப்போம். ஆனால், பல் துலக்குவதற்கு முன்பு இப்படி தண்ணீர் குடித்தால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்றுவிடுமோ என்ற பயம் சிலருக்கு உண்டு.

நாம் தூங்கும்போது, வாயில் உமிழ்நீர் சுரப்பது இயற்கையாகவே குறைந்துவிடுகிறது. இதனால் வாய் வறட்சி அடைகிறது.

உமிழ்நீர் என்பது பற்களை பாதுகாக்கும் அரண். அது உணவு துகள்களை அகற்றி, அமிலங்களை நடுநிலையாக்கி மற்றும் பற்களின் எனாமலை வலுப்படுத்தும் கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்ற தாதுக்களை வழங்குகிறது. ஆனால், இரவு நேரத்தில் உமிழ்நீர் குறையும்போது, பாக்டீரியாக்கள் எளிதாகப் பெருகுகின்றன. இவை பற்களில் உள்ள நுண்ணிய உணவுத் துகள்களை உண்டு அமிலங்களை வெளியிடுகின்றன. இதனால் வாயின் pH அளவு குறைந்து, பற்களின் எனாமல் தற்காலிகமாக பலவீனமடைகிறது.

காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், இரவு முழுவதும் பாக்டீரியாக்கள் உருவாக்கிய அமிலங்கள் நீர்க்கப்பட்டு, வாயின் pH அளவு சீராகிறது. தனால் பல் எனாமல் சேதமடையும் அபாயம் குறைகிறது.
பாக்டீரியாக்களை பாதுகாப்பாக வெளியேற்றுகிறது

“பற்களைத் துலக்கும் முன் தண்ணீர் குடித்தால் பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்றுவிடும் என்பது” தவறான கருத்து என்கிறார் டாக்டர் ராமகிருஷ்ணா. நம் வயிற்றில் உள்ள சக்திவாய்ந்த அமிலங்கள் நாம் விழுங்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். எனவே, தண்ணீர் குடிப்பது வாயில் தேங்கியுள்ள பாக்டீரியா மற்றும் கழிவுகளை சுத்தப்படுத்தவே உதவுகிறது.
உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கிறது

காலையில் தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் சுரப்பிகளை சுறுசுறுப்பாக்குகிறது. புதிய உமிழ்நீர் சுரப்பதால், அதில் உள்ள தாதுக்கள் பற்களின் எனாமலை இயற்கையாகவே பாதுகாக்கின்றன.

பெரும்பாலான டூத்பேஸ்டில் ஃபுளோரைடு உள்ளடக்கம் உள்ளது. இது பற்களின் மேற்பரப்புடன் இணைந்து, அமில தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் வலுவான அடுக்கை உருவாக்குகிறது.

பல் துலக்கிய உடனே தண்ணீர் குடித்தால் அல்லது வாயை கொப்பளித்தால், பற்களில் ஒட்டியிருக்கும் ஃபுளோரைடு அடித்துச் செல்லப்பட்டுவிடும். இதனால் டூத்பேஸ்டின் முழுமையான பலன் பற்களுக்கு கிடைக்காது என்கிரார் மருத்துவர் ராமகிருஷ்ணா. எனவே, பல் துலக்கிய பிறகு குறைந்தது 30 நிமிடங்களுக்கு தண்ணீர், காபி, டீ அல்லது உணவு எதையும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது என்கிறார்கள்..
பல் துலக்கிய பின் டூத் பேஸ்டை மட்டும் துப்பிவிடுங்கள். வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்க வேண்டாம்.
காபி, டீ, தண்ணீர் அல்லது காலை உணவு உட்கொள்வதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருங்கள்.
காலையில் பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது வாயின் இயற்கையான பாதுகாப்பு திறனை மேம்படுத்துகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள முதலில் தண்ணீர் குடிப்பது, பிறகு பல் துலக்குவது, வாயை கொப்பளிக்காமல் டூத்பேஸ்டை மட்டும் துப்புவது, 30 நிமிடங்கள் காத்திருப்பது ஆகிய வரிசையை சரியாக பின்பற்றினால் பற்கள் வலுவடைவதோடு, நீண்ட கால வாய் ஆரோக்கியமும் மேம்படும்!