இன்றைய திகதியில் தைரொய்ட் சுரப்பியில் ஏற்படும் சமசீரற்ற நிலை காரணமாக வயது வித்தியாசம் ஏதுமின்றி இரு பாலினரும் தைரொய்ட் கட்டி பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதற்கு கடந்த தசாப்தங்களில் கழுத்தில் தழும்புகளுடன் கூடிய அல்லது வடுக்களுடன் கூடிய பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்கி வந்தனர்.
ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் காரணமாக தழும்புகள் அற்ற – வடுக்கள் அற்ற- தைரொய்க்டொமி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்முடைய உடல் மாற்றங்களுக்கும் , சீரான ஆரோக்கியத்திற்கும் தைரொக்ஸின் எனும் ஹோர்மோன் அவசியம். இதனை எம்முடைய கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைரொய்ட் சுரப்பிகள் சுரக்கின்றன. இந்த தைரொய்ட் சுரப்பியில் பலருக்கு சம சீரற்ற நிலை ஏற்படும்.
இதன் காரணமாகவும் அவர்கள் சிகிச்சை பெற வேண்டியதிருக்கும். அதே தருணத்தில் இந்த தைரொய்ட் சுரப்பியில் தீங்கற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் கட்டிகளும் ஏற்படும்.
பெரும்பாலானவர்களுக்கு தீங்கற்ற கட்டிகள் தான் ஏற்படும் என்றும் புற்றுநோய் உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்தும் கட்டி பத்து சதவீதத்திற்கும் கீழ் தான் பாதிப்பு ஏற்படும் என்றும் இதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால் ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை அளிக்க முடியும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் ஊசி பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இதன் முடிவின் அடிப்படையில் துல்லியமாக அவதானிப்பார்கள். இவர்களுக்கு தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய தழும்புகள் ஏதும் இல்லாத சத்திர சிகிச்சைகளை செய்து முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.




