மதுரை கொட்டாம்பட்டி அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலை அரங்கேறிய பயங்கர சாலை விபத்தில், அரசு பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்தச் சோக சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 41 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மதுரை கொட்டாம்பட்டி பேருந்து விபத்து நடந்தது எப்படி?
சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி இன்று அதிகாலை ஒரு தனியார் ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாடின்றி அதிவேகமாகச் சென்ற அந்தப் பேருந்து, சாலையின் நடுவே இருந்த மையத் தடுப்பில் (Median) பலமாக மோதியது. பின்னர், அப்படியே எதிர் திசையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில், ஆம்னி பேருந்து இடதுபுறமாகத் தூக்கி வீசப்பட்டு, வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையின் மீதும் மோதி நின்றது. இந்த மோதலில் அந்த நிழற்குடை முற்றிலும் சேதமடைந்தது.
மீட்புப் பணிகளும் தீவிர சிகிச்சையும்
அதிகாலை நேரத்தில் இரு பேருந்துகளும் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால், இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்த 41 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, முதலில் மேலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாதி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் நேரில் ஆய்வு
விபத்து நடந்த இடத்திற்குச் சரக டிஐஜி அபினவ் குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இடிபாடுகளுக்குள்ளான பேருந்துகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



