மகிந்த – கோட்டா காலத்து சிறைக் கலவரங்கள்ஸ! ; வாய் மூடி மெளனம் காத்த எதிர்க்கட்சிகள்

 

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவி வகித்த காலத்தில் அரச பயங்கரவாதங்கள் பல வடிவங்களில் இன பேதம் பார்க்காமல் நாட்டு மக்கள் அனைவரையும் ஆக்கிரமித்திருந்தன.

ஆனால் அச்சம் காரணமாக அப்போது எவருமே வாய் திறக்கவில்லை. எதிர்க்கட்சி பிரமுகர்களும் கடும் அச்சத்தினால் கட்டுண்டு கிடந்தனர்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சிலர் இப்போது திடீர் புரட்சியாளர்களாக மாறி அது குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சி பிரமுகர்கள் அரசாங்கத்தை நோக்கி சராமரியாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.

ஆனால் ஊடக சந்திப்புகளை நடத்திய எதிர்க்கட்சியினரை கேள்விகளால் துளைத்தெடுத்தனர் சில சிங்கள ஊடகவியலாளர்கள். நீர்கொழும்பு சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றால் இதற்கு முன்னர் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்பது?

2012 இல் மஹர, வெலிக்கடை சிறைச்சாலை சம்பவங்களின் போது கைதிகளின் பட்டியலை கைகளில் வைத்துக்கொண்டு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதே அந்நேரம் யார் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகினர்?

 

2021 இல் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று மதுபோதையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டினாரே அந்நேரம் நீங்கள் ஏன் கேள்வியெழுப்பவில்லை போன்ற கேள்விகள் எதிர்க்கட்சி பிரமுகர்களிடம் கேட்கப்பட்டன. இதற்கு அவர்களால் உரிய பதில்களை தர முடியவில்லை. Language Resources

83 வெலிக்கடை சம்பவத்துக்குப் பிறகு அதே சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் பாதுகாப்பு படையினரால் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் மகிந்த ராஜபக்ச. அதே வேளை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரண்டு சிறைச்சாலை மோதல் சம்பவங்கள் இடம்பெற்றன.

2020 மார்ச் மாதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் பின்பு கலவரமாக மாறியதில் இரண்டு கைதிகள் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு நவம்பர் மாதம் மஹர சிறைச்சாலையில் கொவிட் தொற்று தொடர்பில் தமக்கு உரிய நிவாரணங்களை வழங்கக்கோரி கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பின்பு மோதலாக உருவெடுத்ததில் 11 கைதிகள் கொல்லப்பட்டதுடன் நூறு பேர் வரை காயங்களுக்குள்ளாகினர்.

இவை பற்றி ஊடகவியலாளர் சந்திப்புகளில் எதிர்க்கட்சிகளிடம் கேள்வியெழுப்பிய போது எதிர்க்கட்சிகளின் ஒரே பதிலாக இருந்த விடயம், ‘அதனால் தான் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வழங்கியுள்ளனர்

ஆகவே இவர்களும் அவர்கள் விட்ட தவறை செய்யக் கூடாது ’ என்பதாகும். எதிர்க்கட்சிகள் கூறுவதை பார்க்கும் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியிலிருப்பதை இவர்கள் விரும்புகிறார்களோ தெரியவில்லை.

கைதிகளின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை அரச பயங்கரவாதத்தின் காவலர்கள் என சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறி வருகின்ற நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் தட்டுத்தடுமாறி பதில் கூறி சமாளித்து நடையை கட்டியுள்ளனர் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள்.

 

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டதுடன் நூறு பேர் வரை கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் சிறைச்சாலை அதிகாரிகளாவர். இச் சம்பவமானது சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் போதை பொருள் கும்பல்களுக்கும் பாதாள உலக கோஷ்டியினருக்குமிடையிலான மோதலாகவே உருவெடுத்ததாகவும் போதை பொருட்கள் பற்றி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கிய நபர்களே முதலில் தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நீதி அமைச்சர், கைதிகளின் கைகளுக்கு எவ்வாறு துப்பாக்கிகள் கிடைத்தன என்பது பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் பின்னணியில் போதை பொருள் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே பிரதான காரணகர்த்தாக்கள் என்பதில் உண்மைகள் இருக்கின்றன.

கடந்த ஆட்சிகளின் போது சிறைச்சாலைகளில் சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வந்தவர்களில் பிரதானமானவர்கள் இத்தரப்பினராவர். இவர்களுக்கு சிறைச்சாலைக்குள் போதை பொருட்கள் உட்பட ஏனைய சகல சலுகைகளையும் செய்து கொடுப்பதில் மும்முரமாக இருந்தவர்கள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களாவர்.

பல்வேறு குற்றச்சம்பவங்கள், போதை பொருள் கடத்தல் உட்பட பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நாடெங்கினும் ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இதில் சிறைச்சாலை பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவர். கைதிகளாக உள்ள போதை பொருள் பாவனையாளர்களுக்கு அவர்களின் உறவினர்கள் ஊடாக சிறைச்சாலைக்குள் போதை பொருட்களை விநியோகித்த காவல்துறையினர் தண்டனை இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு சிலர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சிறைச்சாலைகளுக்கும் போதை பொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உரியாவாறு தமக்கு போதை பொருட்கள் கிடைக்காத காரணத்தினால் ஏற்பட்ட உச்சகட்ட ஆத்திரமே மோதல்களுக்கு வழிவகுத்தது என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை சிறைச்சாலைகளுக்குள் இடம்பெற்ற மோதல்கள் வன்முறை சம்பவங்களில் பாரதூரமான சம்பவம் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற வெலிக்கடை மனித படுகொலை சம்பவங்களாகும்..

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சக கைதிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்க் கைதிகளின் எண்ணிக்கை 53 ஆகும். இதில் தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கதுரை , குட்டிமணி ஆகியோரும் அடங்குவர். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவத்தின் ஒரு கட்டமாகவே வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் இடம்பெற்றன.

சக சிங்கள கைதிகளை தூண்டி விட்டு தமிழ்க் கைதிகள் இருக்கும் சிறைக் கூடங்களுக்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் ஜே.ஆர். அரசாங்கத்தின் சிறைச்சாலை அதிகாரிகளாவர்.

அப்போது பிரதமராக இருந்தவர் ரணசிங்க பிரேமதாச. 83 ஜுலை கலவரத்துக்கும் சிறைச்சாலை படுகொலை சம்பவத்துக்கும் இன்று வரை ஐக்கிய தேசிய கட்சி கட்சியை பிரதிநிதித்துவம் செய்த, பின்வந்த தலைவர்கள் எவரும் மன்னிப்பு கோரவில்லை. அக்கட்சியோடு இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டி அமைச்சுப்பதவிகளை வகித்த தமிழ் அரசியல்வாதிகளும் அது குறித்து பாராளுமன்றத்தில் பேசுவதை தவிர்த்தே வந்துள்ளனர். Language Resources

 

83 கறுப்பு ஜுலை சம்பவத்தைப்பற்றி வாயே திறக்காத அப்போதைய பிரதமர் ஆர்.பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச இன்றைய அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசுகின்றார்.

அதற்கு எதிரணியில் இருக்கும் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தலையாட்டிக்கொண்டிருக்கின்றனர். எதிரணியில் அங்கம் வகிக்கும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது ஒரு சம்பவம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் காலத்தை கடத்திக்கொண்டிருக்கின்றனர்.

அது அவர்களின் இயல்பு. அதை தடுக்க முடியாது. ஆனால் இந்த நாட்டின் பேரினவாத சிங்கள தலைமைகளால் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்டு உரிமைகள் நசுக்கப்பட்டு வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அவர்களுடன் இணைந்து இதை ‘அரச பயங்கரவாதம்’ என்று வர்ணிப்பது எத்தகைய முரண் நகை?

கடந்த காலங்களில் இதே அரச பயங்கரவாதம் பல முனைகளில் தனது இரும்புக் கரங்களை க் கொண்டு தமிழர்களை நசுக்கிய போது அச்சம்பவங்களைப் பற்றி எவரும் வாய் திறக்க முடியாத சூழல் நிலவியதை மறுக்க முடியாது.

ஆனால் அதன் பிறகும் கூட அது பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு சில தமிழ்த் தரப்பினரே முன் வந்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவங்கள் போன்று இதற்கு முன்னரும் இடம்பெறவில்லையா என்று இச்சம்பவத்தை நடப்பு அரசாங்கம் கடந்து செல்ல முடியாது என்பது முக்கிய விடயம்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்கும் தரப்பினர் கடந்த கால சம்பவங்கள் குறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதையும் முன்னெடுத்திருக்கின்றனரா, அப்போதைய ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க திராணி இருந்தா என்பதே இப்போது எம்மத்தியில் எழும் கேள்வியாகும்.

இதே வேளை முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவும் சம்பவத்துக்கு பொறுப்பேற்று நீதி அமைச்சர் பதவி விலகுவதே பொருத்தமானது என கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் பிரதமராக இருந்த நல்லாட்சி காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி ஊழல் மற்றும் அவர் மீதான பட்டலாந்த முகாம் படுகொலைகள் , சித்திரவதைகளுக்கு அவர் எப்போதாவது பொறுப்பேற்றாரா என்ற கேள்விகளும் இங்கு எழுகின்றன.

மொத்தத்தில் அவரவர் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பல சம்பவங்களுக்கு குறித்து வாய் மூடி மெளனமாக இருந்த ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் தற்போது ஒரே அணியாக எதிர்க்கட்சியிலிருந்து நடப்பு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். எனினும் அவைகளால் ஒன்றும் இடம்பெறவில்லையென்பதே முக்கிய விடயம்.