கணவரை காப்பாற்ற பாம்பு விஷத்தை வாயால் உறிஞ்சிய மனைவிக்கும் விஷம் பரவிய ஆபத்து: பாம்பு கடித்தால் என்ன செய்யக்கூடாது?

 

பாம்பு கடித்த தன் கணவரை காப்பாற்ற, அவரது மனைவி காயத்திலிருந்து விஷத்தை வாயால் உறிஞ்சியதால் இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் ஆபத்து மற்றும் உடனடியாக செய்ய வேண்டிய விஷயத்தை மருத்துவர் விளக்குகிறார்.

சீனாவின் யுவான்யாங் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த முதியவரை நாகப்பாம்பு ஒன்று விரலில் கடித்தது. சில நிமிடங்களிலேயே அவரது விரல் வீங்க தொடங்கியதுடன், அவருக்கு தலைச்சுற்றலும் பலவீனமும் ஏற்பட்டது. டிவி தொடரில பார்த்ததை வைத்து, பதற்றமடைந்த அவரது மனைவி, தன் கணவரை காப்பாற்றுவதற்காக அவரது விரலில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்ச முயன்றார். பின்னர், விவசாயி அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சம்பவம் அதோடு முடிவடையவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகு, அந்த பெண்ணின் வாய், நாக்கு, முகம் மற்றும் கை, கால்களில் மரத்துப்போகும் உணர்வு ஏற்பட்டது. அடுத்த நாள் கடுமையான சோர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம், பாம்புக்கடி தொடர்பான தவறான நம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்காக பெங்களூரை சேர்ந்த உள் மருத்துவ ஆலோசகர் Dr. பிரஜ்வல் கே. சி அணுகிய போது, பாம்பு கடித்த இடத்திலிருந்து விஷத்தை வாயால் உறிஞ்சுவது மிகவும் ஆபத்தானது, அதை ஒருபோதும் செய்யக்கூடாது என்று எச்சரித்தார்.

விஷத்தை உறிஞ்சுவது ஏன் ஆபத்தானது?
மருத்துவர் கூறியதாவது, “விஷத்தை உறிஞ்சுவது அது உடலுக்குள் பரவுவதைத் தடுக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், இதனால் உடலில் பரவும் விஷத்தின் அளவில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படாது. இதுபோன்ற முயற்சிகள் சரியான மருத்துவ சிகிச்சை பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும். வாயில் உள்ள கிருமிகள் காயத்திற்குள் சென்று தொற்றை ஏற்படுத்தலாம். குறிப்பாக, விஷத்தை உறிஞ்சுபவரின் வாயில் காயங்கள் அல்லது புண்கள் இருந்தால், அது வழியாக விஷம் ரத்த ஓட்டத்திலும் கலக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், காயத்தை மீண்டும் மீண்டும் அழுத்துவது அல்லது கீறிவிடுவதோ அந்த இடத்திலுள்ள திசுக்களை சேதப்படுத்தி, காயத்தை மேலும் மோசமாக்கும்” என எச்சரிக்கிறார்.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
விஷப்பாம்பு கடித்தால் முதலில் செய்ய வேண்டியது, பாதிக்கப்பட்டவரை மிக விரைவாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான். ஏனெனில், பாம்பு விஷத்திற்கு ‘ஆன்டிவெனம்’மட்டுமே தகுந்த சிகிச்சையாகும்.

மருத்துவ உதவி கிடைக்கும் வரை செய்ய வேண்டியவை:

பாதிக்கப்பட்டவரை அமைதிப்படுத்தி, தைரியம் கூறுங்கள். பதற்றமடைவதோ அல்லது தேவையில்லாமல் அசைவதோ விஷம் உடலில் வேகமாகப் பரவ வழிவகுக்கும்.
கடித்த கை அல்லது காலை முடிந்தவரை அசைக்காமல் நேராக வைக்கவும்.
தேவைப்பட்டால், ரத்த ஓட்டத்தை தடுக்காதவாறு ஒரு மென்மையான துணி அல்லது பேண்டேஜ் லேசாக கட்டலாம்.
கடித்த இடத்தின் அருகில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மோதிரம், வளையல், கடிகாரம் அல்லது இறுக்கமான ஆடைகளை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.

பாம்பு கடித்தால் என்ன செய்யக்கூடாது?
கடித்த இடத்தை கத்தியால் கீறவோ அல்லது வெட்டவோ கூடாது.
விஷத்தை வாயால் உறிஞ்ச முயற்சிக்கக் கூடாது.
கடித்த இடத்தில் ஐஸ் கட்டி அல்லது வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்தக் கூடாது.
கடித்த இடத்திற்கு மேலே துணியை மிக இறுக்கமாகக் கட்டக் கூடாது. ஏனெனில், இது ரத்த ஓட்டத்தை முற்றிலும் தடைசெய்து, அந்தப் பகுதியை மேலும் சேதப்படுத்தும்.
பாம்பை பிடிக்க அல்லது கொல்ல முயற்சிக்கக் கூடாது. இது பாம்பு மீண்டும் கடிப்பதற்கான ஆபத்தை அதிகரிக்கும்.
பாம்புக்கடி ஏற்பட்டால் நேரத்தை வீணாக்காமல் மருத்துவமனைக்குச் செல்வதே உயிரைக் காப்பாற்றும் சிறந்த வழி. சரியான நேரத்தில் ஆன்டிவெனம் சிகிச்சை பெறுவது தீவிர பாதிப்புகளைத் தவிர்க்க உதவும் என மருத்துவர் வலியுறுத்துகிறார்.