இனி பத்திரப்பதிவுக்கு ஆபீஸ்க்கு போக வேண்டாம்! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்!

 

தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் (Sub-Registrar) அலுவலகங்களில் நீண்ட நாட்களாகப் புரையோடிப் போயிருக்கும் லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. சென்னை நந்தனத்தில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பதிவுத்துறை அமைச்சர் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ‘வருகை இல்லா ஆவணப்பதிவு’ (Anywhere Registration) எனப்படும் முழுமையான இணையவழிப் பத்திரப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு அமலுக்கு வரும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.தேர்தல் செய்திகள்

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதலே, விளிம்புநிலை மக்களுக்குத் தடையற்ற மற்றும் ஊழலற்ற சேவைகளை வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடு, மனை அல்லது நிலம் வாங்க நினைப்பவர்கள் இனி பத்திரப்பதிவுக்காகத் தங்களின் வேலைகளைப் போட்டுவிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று மணி கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில், 24 மணி நேரமும் எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளம் வழியாகவே தங்களது சொத்து ஆவணங்களைச் சமர்ப்பித்து, முழுமையான பத்திரப்பதிவைச் செய்துகொள்ளும் அதிநவீன கட்டமைப்பு இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணையவழிப் பத்திரப்பதிவு முறையை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, பதிவுத்துறையின் நிர்வாகத்தை சீரமைக்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த மே 10 முதல் தற்போது வரை திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் சுமார் 259 சார்பதிவாளர்களுக்குப் பணிமாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காலியாக இருந்த 249 சார்பதிவாளர் அலுவலக பணியிடங்களும், 10 நிர்வாகச் சார்பதிவாளர் காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் மற்றும் அதிக வருவாய் ஈட்டும் சார்பதிவாளர் அலுவலகங்களில் தகுதியான நிரந்தர அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டமும், ஆவணங்களைச் சரிபார்க்கக் கோரப்படும் மறைமுக லஞ்சமும் முற்றிலும் ஒழிக்கப்படும் என அரசு நம்புகிறது. “முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் அரசாக இந்த அரசு செயல்படுகிறது; ஆன்லைன் பத்திரப்பதிவு மூலம் நுகர்வோரின் நேரமும் பணமும் மிச்சமாவதுடன், பதிவுத்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் 100% வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்” என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உறுதியளித்துள்ளார்.