தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவிற்கு அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், புதிய தலைநகருக்கு 'நுசாந்தரா' என பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் மொத்த மக்கள் தொகை 26 கோடி. தலைநகர் ஜகார்த்தாவில் ஒரு கோடி பேரும், அருகில் உள்ள நகரங்களில் மூன்று கோடிக்கு மேலும் மக்கள் வசிக்கின்றனர். நகரங்களை நோக்கி மக்கள் குவிவதால் நெருக்கடி அதிகரித்துள்ளது.தலைநகர் ஜகார்த்தா, 500 ஆண்டுகளுக்கு முன் டச்சுக்காரர்களால் நிர்மாணிக்கப்பட்ட நகரம். தற்போது, பேரிடர், இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால், கடலில் மூழ்கும் நகரங்களில் இது முதல் இடம் வகிக்கிறது.
இந்நிலை நீடித்தால், 2050-ம் ஆண்டுக்குள் ஜகார்தாவின் மூன்றில் ஒரு பகுதி, கடலில் மூழ்கும் நிலை உருவாகும் என்று புவிசார் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால் அந்நாட்டின் தலைநகரை வேறு இடத்திற்கு மாற்ற, அதிபர் ஜோக்கோ விடோடோ முடிவு செய்தார்.
இந்நிலையில், இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து, போர்னியா தீவுக்கு மாற்றும் மசோதா, அந்நாட்டு பார்லிமென்டில் நேற்று முன்தினம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய தலைநகருக்கு நுசாந்தரா என பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பெரும்பான்மை மக்களாக முஸ்லிம்கள் இருந்தாலும், ஹிந்து பாரம்பரியம், கலாசாரம் உடைய நாடாக இந்தோனேஷியா உள்ளது. இங்கு 40 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிக்கின்றனர். நாட்டின் தேசிய சின்னம், கருடன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேஷியாவை 16ம் நுாற்றாண்டு வரை ஹிந்து மன்னர்கள் ஆண்டனர்.
இந்தோனேஷியாவை ஹிந்து மன்னர் ஹயாம் வருக் ஆண்டபோது, அந்நாட்டை ஒட்டியிருந்த மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அவர் தீவு நாடுகளை இணைக்கும் வகையில் நுசாந்தரா என பெயரிட்டார்.
''நுசாந்தரா, இந்தோனேஷியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வரலாறை வெளிப்படுத்துவதால் புதிய தலைநகருக்கு இந்தப் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது,'' என அந்நாட்டின் திட்டத்துறை அமைச்சர் சுதர்ஷோ கூறினார்