அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு
பதவிப்பிரமாணத்துக்குப் பின் சத்தியப்பிரமாணம்
சகோதரர்கள் இருவரும் அமைச்சைப் பகிர்ந்தனர்
சபையில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கீடு
சபைக்குள் இருவகையான வணக்கம் செலுத்தினார்
அமைச்சரவைக்குள் ஐந்து ராஜபக்ஷர்கள் உள்ளனர்
2022 வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பார்
51 நிறுவனங்கள் அவரின் கீழே உள்ளன
அமைச்சரவை அந்தஸ்துள்ள 29ஆவது அமைச்சராக, பெசில் ராஜபக்ஷ, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவருக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்தார்.
அமைச்சரவை மாற்றமொன்று ஏற்படுமென ஊகங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற பதவிப்பிரமாணத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வசமிருந்த நிதியமைச்சு, பெசில் ராஜபக்ஷவுக்கு கைமாற்றப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.
பெசில் ராஜபக்ஷ, எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னமே, அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அவருக்கு, பாராளுமன்றத்தில் முன்வரிசை ஆசனத்தை ஒதுக்கிக்கொடுக்கவேண்டும் என்பதற்காகவே, சத்தியப்பிரமாணத்துக்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக, எம்.பியில்லாத ஒருவர், அமைச்சராக நியமிக்கப்பட்ட சந்தர்ப்பமாகவே இச்சந்தர்ப்பதை பார்க்கவேண்டியுள்ளது.
இதுவே முதலாவது சந்தர்ப்பமாகக் கூட இருக்கக்கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதற்காக ஒருவரின் பெயர் பிரேரிக்கப்பட்டு, அந்த பெயர் வர்த்தமானியில் வெளியாகுமாயின், அவர் எந்நேரத்திலும் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளலாம். அதற்கு முன்னர், அவருக்கு எந்தவொரு பதவியையும் ஏற்று பதவிப்பிரமாணம் செய்துகொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெசில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், நிதியமைச்சுக்குச் சென்று, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.அவரே, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பார்.
இந்நிலையில், நிதியமைச்சின் கீழ் 52 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வதற்காக, சபைக்குள் பிரவேசித்த பெசில் ராஜபக்ஷ, இருவகையான வணக்கம் செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.
சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றுமொரு சகோதரரான சமல் ராஜபக்ஷ, ஆகியோரின் முன்னிலையில் சென்று, குனிந்து வணக்கம் செலுத்தினர்.
அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களுக்கு சாதாரணமாக கைக்கூப்பி வணக்கம் செலுத்தினர்.
எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்துக்கு முன்பாக நின்று , எதிரணியினரைப் பார்த்து கைக்கூப்பி வணக்கம் செலுத்தினார்.
நேற்றைய அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர், அமைச்சரவைக்குள் ராஜபக்ஷர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தலைமையிலான அரசாங்கத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். ஐந்தாவதாக பெசில் ராஜபக்ஷவும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, இன்னும் சிலர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர் என்றும், இன்னும் சில அமைச்சர்கள், அமைச்சரவையிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவையிரண்டுமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.